அன்னையர் தினம்.பதிவு 9
திசெம்பர் 5, 2013 at 5:20 பிப 20 பின்னூட்டங்கள்
அம்மா புதுச்சேரி கிளம்பு முன்னரே சாச்சியாத்து நீலா பாட்டிக்கு தபால் எழுதிக்
கொடுக்கணும், விகடன் ஒருநாள் வாசித்துக் காட்டணும், அவாள்ளாம்
நம்முடையகிட்டின ஸொந்தக்காரர்கள். அந்த பொண்ணுக்கு அவ்வளவா போராது.
சித்த தவராம செஞ்சு கொடுத்துடு,பாட்டி பாவம் என்று உறுதி மொழி எழுதிக்
கொடுக்காத குறையாக வாங்கிக் கொண்டுதான் போனாள்.
எங்கபாட்டி அந்த பாட்டி எல்லோரும் அக்கா,தங்கைகளின் பெண்களாம். பாட்டியின்
புதுமருமகள் கூட இருக்கிராள்.
அவளுக்கும் எழுத,படிக்க ஸரளமாக வராதுபோலும்.
எப்பவோ அஞ்சு க்ளாஸ் படிச்சுட்டு,தேமேன்னு வீட்டு வேலைகலைச் செய்து
கொண்டிருந்த பொண்ணு. எழுத்தெல்லாம் மரந்தே போச்சென்று சொல்லக்கூடிய
நிலையிலிருந்த பெண்.
அவ எதையாவது எழுதி இது ஸரியா இருக்கா பார் என்று என்னிடம் காட்டுகின்ற
ரேன்ச். கலியாணமாகி இரண்டு மாதம் இருந்து விட்டு புருஷன் மிலிடரியில்
வேலை செய்வதனால் விட்டு விட்டுப் போய் விட்டான்.
புருஷன் விகடனுக்கு சந்தா கட்டி புத்தகம் படி என்று சொல்லி விட்டுப் போனான்.
நான் அவ மாமியாருக்கு உதவி செய்யப் போனால், இவ கடிதம் எழுதறத்துக்கும்
என்னை கேட்பாள்.
ஸாதாரண கடிதம்தான். அவன் படிச்சு படிச்சு சொல்லிட்டுப் போனான்.
இதுக்குஒன்றுமே தெரியவில்லையே யென்று பாட்டி அங்கலாய்ப்பாள்.
ஞாயிறு காலை புக் போஸ்டில் விகடன் வரும்.
அந்த நேரத்துக்குச் சரியாகப் போய்விட்டு,புத்தகத்தைப் பிரித்துப் படித்து விட்டு
தொடர் கதைகளை கிரகித்துக் கொண்டு,கார்ட்,கவரெல்லாம்வாங்கச்சொல்லிவிட்டு
சாப்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லித், திரும்பவும் போய் எல்லாம் செய்து
கொடுப்பது வழக்கம்.
அந்தநாளையமாமியார்கள்,எல்லாரும்கெடுபிடிதான்.எதையாவதுசொல்லிக்
கொண்டும், குறை கண்டு கொண்டும் ஸந்தோஷமாக இருக்க விடமாட்டார்கள்.
இந்த நாளில் மருமகள்கள் வயதான மாமியார்களை அதே மாதிரிதான்
நடத்துகிரார்கள்.
காலம் இம்மாதிரிதான் மாறியிருக்கிரது.
எத்தனை விதமான நாட்டுப் பெண்கள் வேணும். பாங்கும் பதவிசுமாக இருப்பார்கள்.
ஸௌக்கியமாக இருக்கேன்னு ஒரு கடிதம் எழுதக் கூட உத்தரவு வாங்கும்
நிலையில் இருப்பார்கள்.
எனக்கு ஸ்கூலுக்கு பக்கத்தில் போஸ்டாபீஸ்.
தப்புதண்டாயில்லை, கவர் வாங்கி,விலாஸம் எழுதி அவர்கள் கொடுக்கும்
கடிதத்தை வைத்து அனுப்பி அவர்களுக்கு ஒத்தாசையும் சில ஸமயம் செய்ய
வேண்டி வரும்.
ஸோஷியல் ஸர்வீஸில் இதுவும் அடங்கும்.
நான் வீட்டுப் பெண் அல்லவா? பலவித நாட்டுப்பெண்களையும், பார்த்தும்
பழகியும், அவர்களுக்குச் சின்ன சின்ன உதவியும், இரண்டாம் பேருக்குத்
தெரியாமல் செய்வது வழக்கம்.
இது ஊரின் உதாரணம்.
வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை. தபால்காரன் வந்து போயாச்சு.
வழக்கமா வரும்,சுதேசமித்திரன் ஞாயிறுமலர்,வாரப்பதிப்பு,எல்லாவற்றையும்
ஒரு நோட்டம் விட்டு விட்டு, விகடன் பிரிக்க பாட்டியாம்.
நாலுவீடு தள்ளிதான் வீடு.
வா,உன்னைக் காணோமேன்னு பார்த்தேன். இந்தா உன் புத்தகம்.
ஏண்டிம்மா உங்கப்பா ஏதாவது கடுதாசு போட்டாளா?
அந்தப் பாழும் உடம்பு இப்போ தேவலையா?
எப்படி இருக்காளாம்?
போனவுடனே பாட்டி அடுக்கடுக்காய் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள்.
சின்ன பெண்ணானால் கூட குடும்பத்தின் விஷயங்கள் இல்லையா?
நான் கூடவே இருந்து பார்த்தவள். என் அண்ணாஎங்காவது போனால் கூட கூடவே
நானும் போவேன். அவசியமானஇடங்களுக்குதான்.யாராவது வொருவர்
இருப்போம்.
என் கண் அவன் மேலேயே இருக்கும்.
அவன் ஸரியாக இல்லை என்று என் மனதில் தோன்றும் சிலஸமயங்களில்.
பக்கத்தில் போய், கையை பிடித்துக்கொண்டு,பாபு வா, ஆத்திற்குப் போகலாம்
வலுக்கட்டாயமாக அழை,த்து வந்து விடுவேன்.
ஒண்ணும் இல்லை, உனக்கு வேறு வேலை கிடையாது எப்பவும் என்னைச்
சுற்றி வந்து கொண்டு கோபித்துக் கொண்டே வந்து விடுவான்.
யூகம் ஸரியாகிவிடும்.
உடம்பு ஸரியில்லாது போவதும் உண்டு. நார்மலாக இருப்பதும் உண்டு.
பாட்டி துருவித் துருவி விஷயங்கள் கேட்கும் போது, ஒவ்வொன்றாய் ஞாபகம்
வருகிரது.
இனிமே எல்லாம் ஸரியாகிவிடும் பாட்டி.
நல்ல டாக்டரிடம் போயிருக்கா, நன்னாயிடுவான்.
ஆமாம்,சின்ன பொண்ணானாலும் எல்லாம் தெரிஞ்சிண்டிருக்கே!!
பாட்டி எதார்த்தமாக கொஞ்சம் தூக்கி வைத்துப் பேசுகிராள்.
ஸாமி,பகவானே நன்னா ஆயிண்டு வரணும், ஸாமியை வேண்டிக் கொண்டே
விகடனைப் பிரித்தால்
பக்கத்தாத்துப் பையன் ஓடி வருகிறான்.
பாட்டி உன்னைக் கூப்பிட்டு வரச்சொன்னாள். அவஸரஅவஸரமாகக்
கூப்பிடுகிறான்.
என்னவோ,ஏதோ என்று ஓடினால், அதுக்குள் ஆத்து வாசலில் நாலு.பேர்கள்.
எதிராத்து மாமா கையில் ஒரு பேப்பர்.
உங்களையெல்லாம் அனுப்பச் சொல்லி தந்தி வந்திருக்கு.
எல்லோரும் பதட்டமாக இருக்கிறார்கள்.
என்னவோ தெரியலியே!
ஒண்ணும் இருக்காது. புறப்படுவதற்கு தயாராகுங்கள்.
என்னவாயிருக்கும்?யாரை யார் கேட்பது? என்னவோ தெரியலியே
ஊர் என்றால் உபகாரமும் தானே.
பத்தரைமணிக்கு பஸ் ஸிருக்கிரது. அதைப் பிடிக்கணும்.
வேறு வழியில்லை. அப்புரம் ராத்திரிதான் வண்டி.
கூட்டம் ரொம்பி வழியுமே,டிக்கட் போடமுடியாதுன்னு சொல்லுவாளே.
அவர்களே ஒருவர்க்கொருவர் பேசுகிரார்கள்.
ஸரி நான் ஒண்ணு சொல்கிறேன். பஸ் ஹோட்டல் வாசலில் நிற்கும்போது,
ட்ரைவர் போலீஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டுதான் போகணும்.
அப்பறம் தான் பஸ் எடுக்க முடியும்.
நான் அவனை அழைச்சுண்டு போய் பார்த்து, ஏற்பாடு செய்கிறேனென்று சொல்லிக்
கிளம்பிப் போனார்கள் இரண்டுபேர்.
ஒண்ணுமிருக்காது, நாங்க கூட வந்து கொண்டு விடுகிறோம்.
சற்று முன் வந்த பாபுவின் கடிதம், முத்து முத்தான எழுத்தில், அப்பா வருவா
நீங்கள் உடன் வரலாம். சமத்தாயிருங்கள்.
என்னவாயிருக்கும்?
அத்தை,சின்ன அத்தை, இன்னும் இரண்டு பெரியவர்கள் நாங்கள் எல்லாம் கிளம்பிப்
போகிறோம்.
நல்லபடி இருக்கணும் பகவானே அத்தை முனகிக் கொண்டே வருகிறாள்.
ஏழு வீட்டினருகில்தான் பஸ் ஸ்டாண்ட். சுந்தரத்தைக் கேட்டால் போகிரது.
முன்னே போய்ச் சேருவோம்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலமா டிக்கெட். இடம்இல்லாமடிக்கட்கொடுக்கக்கூடாது.
எழுதிக் கொடுக்கிரார் இன்ஸ்பெக்டர்.
நின்னுண்டு உட்கார்ந்து போய்ச் சேருகிறோம்.
முதல்லே சுந்தரத்தைப் பார்க்கிரோம்.
நேத்தி உடம்பு ஸரியில்லே. காத்தாலே போனேன். தேவலை டாக்டரெல்லாம்
அவ்வளவு நன்னா பாக்கரா.
ஏதோ வண்டி எதுன்னு ஞாபக மில்லே. எல்லோரும் ஏறிப் போகிறோம்.
ஆச்சு . பர்ண சாலை மாதிரி அழகாக கட்டப்பட்ட வீட்டிலும் நுழையப் போகிறோம்.
எதிர்கொண்டு டாக்டர்,அவருடன் இன்னொரு டாக்டர்.
உங்களுக்காகத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். டாக்டர் சொல்கிரார்.
சுரத்தில்லாத வார்த்தை.
நுழைந்தால் எல்லாத்தையும் நானே செஞ்சூட்டேன். பத்து நிமிஷம் ஆகலே
சூடு இருக்குபாரு அம்மா கதறல்.
ஆத்மராமன்னு பேர் வெச்சேனே. ஆத்மாவுக்கெல்லாம் ராமனாயிட்டான்.
என்ன சொல்ல முடியும். அப்பாவின் கதறல். நீ எனக்கு செய்ய வேண்டாம்னு
சொன்னேனே. நான் உனக்குச் செய்யும்படி ஆகிவிட்டதே.
இந்த வைத்தியத்தில் ஸரியாகாவிட்டால் நான் இருந்து பிரயோஜனமில்லை.
அத்தையிடம் கிளம்புமுன் சொன்ன வார்த்தைகள். அத்தையின் கத்தல்.
ஒரு நாளில் பலமுறை அஸௌகரியமானது. விடாது டாக்டர்கள் மருத்துவம்
பார்த்தது.
எனக்கு என்ன ஆயிற்று என பலமுறை அவன் கேட்டது.
யாரும் எதிர்பார்க்காதது. நடந்து விட்டது.
ப்ரெஞ்ச் இந்தியா. உயிர் பிரிந்து இருபத்திநான்கு மணி நேரம் ஆன பிற்பாடுதான்
அடக்கம் செய்ய முடியும்.
அதற்குதான் நான் கூப்பிட்டேனா என்று டாக்டர் உடனிருந்து வருந்தியது.
முதல் நாளே போய்விட்டதாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த போது.
எந்த மாதிரி ஒரு துர் அதிருஷ்டம்.
நாங்களெல்லாம் என்ன செய்திருப்போம்? அழுதோம். அப்பா அம்மாவைப்
பலவிதங்களில் ஸமாதானப்படுத்த முயன்றோம்.
இப்படி ஒரு அத்தியாயம் முடிந்தது.
எப்போதோ நடந்த கதைதான். படிப்பவர்கள் மன்னிக்கவும். முதல் வருஷம்
ராமேசுவரத்தில் சாந்திகள் செய்த அதேநாள் ,பாண்டிச்சேரி ஸமுத்திரத்தில்
மறு வருஷம், எலும்பும் ,சாம்பலுமாக ஐக்கியமாகிப் போனான்.
பிரம்மசாரி ஆச்ரமம்,இருக்க வேண்டிய விதம்,தெய்வ பக்தி, எல்லாம்
உதாரணமாக இருந்தவன்.
பார்க்கலாம் மறுபடியும்.
Entry filed under: அன்னையர் தினம்.
20 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
GOPALAKRISHNAN. VAI | 5:30 பிப இல் திசெம்பர் 5, 2013
மிகவும் அழகாக இயல்பாக ஒவ்வொன்றையும் ஞாபகம் வைத்து எழுதியிருப்பது படிக்க சந்தோஷமா இருக்கு.
//அந்தநாளைய மாமியார்கள்,எல்லாரும்கெடுபிடிதான்.எதையாவதுசொல்லிக் கொண்டும், குறை கண்டு கொண்டும் ஸந்தோஷமாக இருக்க விடமாட்டார்கள்.
இந்த நாளில் மருமகள்கள் வயதான மாமியார்களை அதே மாதிரிதான் நடத்துகிறார்கள். காலம் இம்மாதிரிதான் மாறியிருக்கிரது. //
வாஸ்தவமான விஷயம் தான். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் கோபு
2.
chollukireen | 9:42 முப இல் திசெம்பர் 6, 2013
இந்த ஸம்பவங்கள் நினைத்தால் ஸினிமா மாதிரி மனக்கண்முன் தோன்றுகிறது.
சிறுவயதில் நம் வீடு,நம்மண்ணா, நம்மது எல்லாம் என்று இருந்த காலம். அதனால் அந்த இழப்பு மனதில் பதிந்து போய் விட்டது.
மேலும் வம்சத்திற்கே ஒரே பிள்ளை என்று இருந்தவன்.
அம்மாவின் நினைவில் இதெல்லாம் வெளிப்படுகிறது.
உங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
chitrasundar5 | 4:26 முப இல் திசெம்பர் 6, 2013
காமாக்ஷிமா,
மனதில் இவ்வளவு சோகத்தையும் வைத்துக்கொண்டுதான் மேற்கொண்டு தொடர முடியாமல் திணறியுள்ளீர்கள் என்பது புரிகிறது. அதிலிருந்து வெளியே வருவது கடினம்தான். யாரிடம் இவற்றை சொல்வது? எங்களிடம் சொன்னதால் இப்போது ஓரளவிற்கு மனபாரம் குறைந்திருக்கும்.
“இந்த நாளில் மருமகள்கள் வயதான மாமியார்களை அதே மாதிரிதான் நடத்துகிரார்கள்”_______ போகிற போக்கில் முக்கியமான ஒன்றை சொல்லிட்டுப் போயிட்டீங்கமா. அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 9:50 முப இல் திசெம்பர் 6, 2013
நினைத்தால், எழுதும் போது, இப்படி மனது வேறு விதமாக மாறிப்போய் விடுகிரது.
இதெல்லாம், எழுதலாமா, கூடாதா என்ற எண்ணம்
மனதை அலைக் கழித்தது என்னவோ உண்மை.
திரும்பவும் இப்படி பதிலெழுதும் போது இன்னும் எவ்வெவ்வளவோ ஞாபகம் வருகிறது.
ஆமாம். இந்த விஷயம் எழுதி முடித்து விட்டேன்.
பாக்கி விஷயங்களை கோர்வைப் படுத்த வேண்டும்.
மற்றபடி அனுபவங்கள் கூடவே இழையோடுவதில்
ஆச்சரியமில்லை. நன்றி சித்ரா. அன்புடன்
5.
ranjani135 | 5:55 முப இல் திசெம்பர் 6, 2013
உடம்பு சரியாகியிருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன் படிக்க – இப்படி ஆயிடுத்தே! இத்தனை வருஷம் கழித்துப் படிக்கும்போதே இப்படி இருந்தால், உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.
போனவர்களும், இருப்பவர்களுமாக காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, இல்லையா?
மனபாரத்துடன் மேலே படிக்கக் காத்திருக்கிறேன்.
6.
chollukireen | 10:04 முப இல் திசெம்பர் 6, 2013
இப்பவும் கூட மருந்தினால் கட்டுக்குள் அடங்குகிறதே தவிர பூராவும் இல்லை என்று சொல்ல முடியாது என பல பேர் சொல்லக் கேட்டிருககிறேன்.
காலம் வேகமாக ஓடிவிட்டது. அவனுடைய கூப்பிடும் பெயரான பாபு, எனது நான்காவது பிள்ளைக்கு வைத்து
அப்படிதான் கூப்பிடுவோம்.
அம்மா இருக்கும் போது இதென்ன பெயரு, எனக்கு கூப்பிடப் பிடிக்கவில்லை என்று பல முறை சொல்லிவிட்டாள்.
போனவர்களும்,இருப்பவர்களுமாக,போகக் காத்திருப்பவர்களுமாகக் காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. உண்மைதான்.
உங்கள் மறு மொழிக்கு நன்றி. அன்புடன்
7.
adhi venkat | 2:11 பிப இல் திசெம்பர் 6, 2013
இயல்பா சொல்லிக் கொண்டு போனீர்கள்… கடைசியில் இப்படி ஆயிடுத்தே…. எவ்வளவோ வருஷங்கள் கடந்திருந்தாலும், இப்படி நினைக்கும் போது துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டு தான் வருகிறது….:((
தொடர்கிறேன்…
8.
chollukireen | 10:27 முப இல் திசெம்பர் 7, 2013
நானே உன் பதில் பார்த்து, திரும்பவும் வாசித்தேன். படிப்பவர்களுக்கும் ணனது இளகிவிடும் என்று தோன்றியது. கண்ணில் திரும்பவும் நீர்.
உண்மைகளிது அதனால் அப்படி இறுக்கிரது என்று நினைக்கிறேன் நன்றிம்மா அன்புடன்
9.
chollukireen | 11:58 முப இல் திசெம்பர் 7, 2013
மனது திருத்தி வாசிக்கவும். அன்புடன்
10.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 1:09 முப இல் திசெம்பர் 10, 2013
வணக்கம்
அம்மா
இன்று தங்களின் தளம் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ.முகவரி
http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_10.html?showComment=1386637420483#c1146577820726854657
தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
11.
chollukireenchollukireen | 6:25 முப இல் திசெம்பர் 10, 2013
ஆசிகள் ரூபன். தகவல் அளித்ததற்கு மிகவும் நன்றி. வலைச்சரத்திற்குப்போய் நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.
கவிதைப்போட்டி,கட்டுரைப் போட்டி என்று ஜமாய்க்கிறீர்கள். நான் படிப்பதுடன்ஸரி. அன்புடன்
12.
chollukireen | 11:09 முப இல் மார்ச் 15, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
அன்னையர் தினப் பதிவு ஒன்பது9 இன்று பதிவாகிறது. பழைய கதைதான். ஆதலால் படியுங்கள்.அன்புடன்
13.
Revathi Narasimhan | 2:10 பிப இல் மார்ச் 15, 2021
அன்பு காமாக்ஷிமா.
இது நடந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் சகோதர பாசம்
நம்மை விடாது.
மிக மிக சங்கடம். நேரில் நிகழ்வது போல எழுதுகிறீர்கள். அந்தக் கால கிராம வாழ்க்கைதான் எத்தனை அற்புதம்.
அதுதான் நம்மை இன்னும் சேர்ந்து வாழ வைக்கிறது.
நலமுடன் இருங்கள் அம்மா.
14.
chollukireen | 11:29 முப இல் மார்ச் 16, 2021
இந்தப் பதிவு எல்லோரையும் படிக்கும்போது வருத்தம் கொள்ளச் செய்துவிட்டது. மன்னிக்கவும். இவைகளை நேரில் பார்த்தும், கேட்டும் மனதில்ப் பதிந்து விட்டதுதான் காரணம்.உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன் பதில் எழுதினால்ப் போவதில்லை. நீங்களும் நலமுடன் இருக்க வேண்டுமம்மா. உங்கள் மறுமொழிகள் அன்பைக் கொட்டி யாவருக்கும் அளிக்கிறீர்கள். நன்றி. அன்புடன்
.
15.
Geetha Sambasivam | 12:34 முப இல் மார்ச் 16, 2021
அடக் கடவுளே! மனதில் ஏதோ தோன்றியதால் தான் படிப்பதைத் தள்ளிப் போட்டேன். இன்னிக்கு எப்படியானும் படிச்சுடணும்னு நினைச்சு வந்தால்! எதிர்பார்த்த மாதிரியே விபரீதம்! என்ன சொல்லுவதுனு புரியலை. இப்போவே இத்தனை வேதனை இருக்கும்போது நேரில் பார்த்து, கேட்டு அனுபவித்தவர்கள் பாடு?
16.
chollukireen | 11:17 முப இல் மார்ச் 16, 2021
சொல்லமுடியாத ஸம்பவங்கள். வேறு விதங்களில் இம்மாதிரி துக்கம் அநுபவித்தவர்கள் ஒருவர்க்கொருவர் ஆறுதல் சொல்வார்கள். எத்தனைவிதமான ஸம்பவங்கள். புதியது புதியதாக இருக்கும். அந்தக்கால நடைமுறைகள். போதும் என்று தோன்றிவிடும். நன்றி. அன்புடன்
17.
ஸ்ரீராம் | 1:21 முப இல் மார்ச் 16, 2021
படித்ததும் மிகவும் வருத்தமாகிப் போனது.
18.
chollukireen | 11:19 முப இல் மார்ச் 16, 2021
துக்கமான ஸம்பவம் அல்லவா. நன்றி. அன்புடன்
19.
நெல்லைத்தமிழன் | 8:06 பிப இல் மார்ச் 16, 2021
முயன்றாலும், முடிவை மாற்ற முடியலையே… வருத்தமான சம்பவங்களை நினைக்க நினைக்க மனது இன்னுமே வருத்தப்படும்.
//இந்த நாளில் மருமகள்கள் வயதான மாமியார்களை அதே மாதிரிதான் நடத்துகிரார்கள்.// – பழைய மருமகள்களின் ஆவேசம் காலத்தை மாற்றிவிட்டதோ?
இயல்பான சம்பவங்கள், வருத்தமான முடிவுதான் என்ன செய்ய? விதி எழுதி எழுதி மேலே செல்கிறது.
பின்னூட்டத்தில் //னவர்களும்,இருப்பவர்களுமாக,போகக் காத்திருப்பவர்களுமாகக் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது// உண்மை…எவ்வளவு எளிய வார்த்தைகளில் வந்து விழுந்திருக்கிறது..
20.
chollukireen | 11:34 முப இல் மார்ச் 17, 2021
இப்போது இவை எல்லாம் மிக்க வருஷங்கள் ஆகிவிட்டதால் புதியவைகள் அந்த இடத்தைப் பிடித்து விட்டது. வேலைப்பளு இப்போதைய மருமகள்களுக்கு அதிகம். வருமானமும் உள்ளவர்கள். சிலதெல்லாம் இப்படித்தான் நடக்கும் என்று விலகிவிட நினைத்தாலும் குற்றமில்லை. எது நடந்தாலும் அதுவும் இயல்புதான் என்ற
மனநிலையைத்தரும் ஆசான்கள் என்றும் எடுத்துக் கொல்ளலாம். நேற்று ஒரு மறுமொழி கைப்பேசியில் எழுதினேன்.ஸரியாகப் போகவில்லை.என்ன தவறு செய்கிறேன் என்று எனக்குத் தெரிவதில்லை. சுடச்சுட வேறுமாதிரி இப்போது வேறுமாதிரி. சில அநுபவம் பேசுகிரது எனக்கு நன்றி. அன்புடன்