Archive for ஜூன் 8, 2016
மயிலத்திலிருந்து திருவருணை–3
வண்டி விரைகிறது புதுவையை நோக்கி.மதியம் ஒரு மணிக்கு கோவில் நடை சாற்றி விடுவார்கள். மூன்று மணிக்குள் வளவனூரில் இருக்க வேண்டும்.
கண்டேன் சீதையை என்ற கணக்கில் கோவிலை நெருங்கி விட்டோம். வண்ணவண்ண மலர்கள்,அருகம்புல் மாலைகள்,தாமரை மொட்டுக்கள்,பூஜா திரவியங்கள் என கடைகளும்,கூட்டத்திற்கும் குறைவில்லை.
மூலவரே வினாயகர். கச்சிதமான கோவில். நேராக கோவில் படிகளை மிதித்து ஏறும் போதே இப்படி,அப்படி. இதோ,அதோ என்று கணேஷர் காட்சிதருகிறார்.வேகவேகமாக தரிசனத்திற்கு விரைகிறோம்.
பிரெஞ்சுக்காரர் ஆட்சியின் போது 1688 இலேயே இவ்விடம் அவர்கள் கோட்டையை அமைத்திருந்தனர். அந்தக் கோட்டைக்குப் பின் புறம் மணலும்,குளமுமாக இருந்தது. ஸமுத்திரக் கரைக்கு அருகிலிருந்ததால் மணல் அதிகமாக இருந்தது. உடன் குளமுமிருந்தது. அதனாலேயே மணலும் ,குளமும் சேர்ந்து மணற்குளமாயிற்று.இக் குளமிருந்த கீழ்க்கரையில் தான் இந்த ஆலயமிருந்தது. ஆதலால் மணக்குள வினாயகர் என்ற பெயர் பிரபலமாயிற்று.
பிரெஞ்சு பிரபலங்களுக்கும் இவ்வினாயகர் மீது பக்தி உண்டு. அரவிந்தாசிரம அன்னையும் இக்கோவிலை விரிவு படுத்த பக்தர்கள் சிரமமின்றி வலம்வர இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள் என்பர்.
வினாயகர் அருகில் இப்பொழுதும் ஒரு பள்ளத்தில் அதில் எப்போதும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறதென்றும்,கூட்டமில்லாத காலமானால்,அந்தத் தண்ணீரையும், பக்தர்களின் மீது தெளிப்பதுண்டு என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்..
எந்தக் கோவிலிலும் இல்லாத முறையில் வினாயகருக்கு இங்கு பள்ளியறை உண்டு. பிரகாரத்திலேயே இருக்கிறது. வினாயகரின் தாய் சக்தி தேவியும் உடனிருப்பதாக ஐதீகம். இதனால் பாதம் மட்டுமே இருக்கும் வினாயகரின் உற்சவ விக்கிரகம் இங்கு கொண்டு செல்லப் படுகிறது.
கீழே இருப்பது மணக்குள வினாயகரின் தங்கத்தேர்
கடைசிப்பேர்வழிகளாக நாங்கள் இருந்ததால் தரிசனம் நல்ல முறையில் ஆயிற்று. யாவருக்கும் எல்லா வரங்களையும் அளித்து மன அபீஷ்டங்களை நிறைவேற்றுவார் இந்த கணநாயகர். நமக்காக மட்டும் இல்லை எல்லோருக்கும் நன்மையைக் கொடு என்று நினைத்துக் கொண்டேன்.
கோவிலைச் சுற்றி ஆங்காங்கே தொன்னையில் தயிர்சாதப் பிரஸாதம் ஒவ்வொருவர்கையிலும்.சாப்பிட்டு மகிழ்ந்து கொண்டு இருந்தனர். பிரஸாத வினியோகம் நடப்பதும் தெரிந்தது. மூன்று வேளையும் கோவிலில் பிரஸாத வினியோகம் உண்டாம். நாங்கள் பிரதக்ஷிணம் முடிந்து வரும்போது, இடம் காலி செய்யும் மும்முரத்தில் இருந்தனர்.
பிரஸாதம் சாப்பிடுபவர்களைப் பார்த்தே சென்ற முறைகளில் சாப்பிட்ட குழைவான தயிர் சாதம் நாக்கில் ருசித்தது. ஐந்து நிமிஷம் தாமதித்திருந்தால் தரிசனமே கிடைத்திருக்காது. தரிசனமே பெரிய வரபிரஸாதமல்லவா?
வண்டி மாப்பிள்ளையின் ஸஹோதரியின் வீட்டை நோக்கிச் சென்றடைந்தது. எனக்குக் குழைய வடித்து மசித்த சாதம் கூடவே வருகிறது . விசாரமில்லை.
மயிலத்திலிருந்து நாங்கள் வருவதாகத் தகவல் கொடுத்ததால் அவர்களும் வாசலிலேயே இன்னும் வரவில்லையே என்று பார்க்க வந்தனர் போலும்.!
வாங்கவாங்க என்று வரவேற்பு கொடுத்தனர். நான் வராது போகமாட்டேன் என்று எனக்கு இரண்டொரு வார்த்தைகள் அதிகமாகச் சொல்லி வரவேற்றனர்.
எங்கள் மாப்பிள்ளையின் தங்கை புருஷரும் எங்கள் ஊர்தான். அவர்களுக்கெல்லாம் சிறுவயதில் பாடம் சொல்லிக் கொடுத்தவள்நான்.. அவரம்மா வயதில் பெரியவரானாலும் அவருக்கு நான் நல்ல சிநேகிதி. அவர்கள் மருமகள்கள். நான் அந்த ஊர் பெண் அல்லவா? அதனால் பல விதங்களிலும் நான் அவர்களுக்கு ஸிநேகிதி. எங்கள் ஊரின் நட்பு அவ்வளவு பெயர் போனது.
என் பெண்ணிற்கும் அவள்சினேகிதி. மாப்பிள்ளையின்அண்ணா,மன்னிகொடுத்தனுப்பிய புடவை ரவிக்கை,வந்த அண்ணா மன்னியின் அன்பளிப்புகள் என மஞ்சள் குங்கும மகிமை விசாரிப்புகளுடன் முடிந்தது.
அம்மா நீ சாப்பிடு. உன் நேரம் ஆகி விட்டது என்றாள் கொஞ்சம் மோர் வாங்கிக் கொண்டு கரைத்துக் குடித்தேன் என் பிரதான உணவை.எதுவும் சாப்பிடுவதில்லை.குழம்புத்தான் சிறிது கொடு போதும் என்றேன் அவள் பயந்து கொண்டே ஒரு முருங்கைக்காய் தானைப் போட்டாள். கேஸரி செய்திருந்தாள். மிக்க நன்றாக இருந்தது. அவர்களின் சாப்பாடும் முடிந்தது.
பரஸ்பரம் புதிய,பழைய கதைகளைப் பேசிக்கொண்டே மணி ஆகி விட்டது. வளவனூரில் அம்மைச்சார் அம்மன் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளுக்கு நண்பர் ஒருவர் மூலம் ஏற்பாடு செய்திருந்தது. அதனால் கிளம்பி விட்டோம். பரஸ்பரம் போன் நம்பர்கள் வாங்கிக் கொண்டு. எப்போது போனாலும் எனக்கு புடவை ரவிக்கை அன்பளிப்பு இல்லாமல் அனுப்புவதே கிடையாது. வயதான ஸுமங்கலி என்ற மரியாதையைக் கொடுத்து விடுவதால் என்ன செய்வது.
ஸரியாக மூன்று மணிக்கு வளவனூர் வந்து சேரும்போதே ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டே நேராக கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். நண்பர் அவரும் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்ததுடன் ,கோவிலுக்கும் வந்திருந்தார்,. ஆக வளவனூர் வந்து விட்டோம்.அடுத்து மற்ற இடங்களுக்குப் போவோம்.
எங்கு சென்றாலும் நம் மும்பைப் பிள்ளையாரும் உடன் வருகிரார்.இது சொல்லுகிறேன் பிள்ளையார்தான்.
படங்கள் சில கூகல்..மிக்க நன்றி