மயிலத்திலிருந்து திருவருணை–6
ஜூன் 24, 2016 at 12:54 பிப 2 பின்னூட்டங்கள்
சண்டிகேசுவரரிடம் பதிந்து விட்டு நவகிரஹ தரிசனம் முடித்துக்கொண்டு வண்டி மலை அடிவாரத்திலேயே சற்று தூரத்தில் கோயில் கொண்டிருக்கும் துர்காம்பாள் கோவிலை நோக்கி விரைந்தது. வெய்யிலோவெய்யில்.
அதிக படியில்லாததால் ஆர்வத்தோடு ஏற முடிந்தது. அம்மனை அழகுற தரிசிக்க முடிந்தது. கோயிலுக்குப் பின்னால் கட்க தீர்த்தம் என்ற ஜுனை இருக்கிறது. யாரும் இறங்கிக் குளிப்பதில்லை. அவ்வளவு ஆழம். எங்கிருந்து ஜலம் வருகிறது.போகிறது என்றே தெரியாது என்று முன்பு சொல்லக் கேட்டிருக்கிறேன். கால் தாங்கமுடியாத வெயில் பெண்ணும் மாப்பிள்ளையும் பிரதக்ஷிணம் செய்து வந்தனர்.
இராகுகால துர்கை இவரையும் பார்த்தோம்.
உட்புறம் படமெடுக்க அனுமதி இல்லை போலும்.
துர்கை தரிசனத்திற்குப்பின் என்னுடைய தகப்பனார் சுமார் 23 வருடங்கள் தமிழாசிரியராக இருந்து ரிடயரான டேனிஷ் மிஷின் ஹைஸ்கூல் மண்ணை மிதித்துவிட்டு வரவேண்டும் என்ற என்நெடு நாளைய ஆசையைத் தீர்த்துக் கொள்ள அந்த ஹைஸ்கூலிற்கு வண்டி விரைந்தது.
எங்கள் குடும்பத்து ஸம்பந்தப்பட்டவர்கள் வசித்த வாழ்ந்த போன இடங்கள் ஞாபகம் வருகிறது. அப்பா கல்வியளித்தது,அண்ணா கல்வி பயின்றது முதலானது ஞாபகம் வைக்க வேண்டிய ஸம்பவங்கள்.
அந்தக்காலத்தில் 19 ஆம் நூற்றாண்டின் போது அதிக மேல்நிலைப் பள்ளிகள் இல்லை. அதிலும் திருவண்ணாமலையில் இரண்டே ஹைஸ்கூல்கள்.
ஒன்று முனிஸிபல் ஹைஸ்கூல். மற்றொன்று டேனிஷ் மிஷின் ஹைஸ்கூல்.
முனிஸிபல் ஸ்கூலில் முற்பட்ட வகுப்பினரின் பிள்ளைகளே படித்தனர். பெண்களுக்கென்று எதுவும் இல்லை.
பிற்பட்ட வகுப்பினர்—ஸரியாகச் சொல்லுகிறேனோ இல்லையோ?
ஹரிஜன் என்று காந்திஜீயால் கௌரவமாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டவர்களுக்கு, அதிகக் கட்டணமில்லாமல் ஏற்றுக் கொண்டது இந்த ஹைஸ்கூல்தான். அப்போது ராஜு சாஸ்திரிகள்,சுவாமிநாதன்,கிருஷ்ணமூர்த்தி,அனந்தசயனம், ஸுப்பிரமணியம் என்கிற என் அப்பா,மற்றும் ஒரு மௌல்வி, அநேக இந்துக்கள் என முற்பட்ட பிராமண ஸமுதாயமே வேலைக்குச் சேர்ந்திருந்தனர்
ராஜு சாஸ்திரிகள் ஒரு பக்கா ஆசாரமானவர். ஸம்ஸ்கிருத வித்வான்.
என் அப்பா பஞ்சாயதன பூஜை,இராமாயண பாராயணம், பஞ்ச கச்ச வேஷ்டி, நெற்றியில் விபூதி,கோபி சந்தனம் ஆசார அனுஷ்டனமுள்ள ஆங்கிலமும் தமிழும் படித்த வித்வான்.
இவர்களெல்லாம் இம்மாதிரியான ஸ்கூல்களில் வேலை செய்கிரார்கள் என்ற ஒரு எதிர்ப்பும் சிலஸமயங்களில் எழுந்தது.வித்யாதானம் எல்லாவற்றிலும் சிறந்தது.
ஸரஸ்வதி வாஸம் செய்யும் இடத்தில் மடி ஆசாரம் யாவும் தானே உண்டாகிவிடும் தனியாக எதுவும் வேண்டியதில்லை என்று சொல்லுவாராம் அப்பா.
கல்வியில் பின் தங்கியவர்களுக்கு வீட்டிலும் சொல்லிக் கொடுப்பாராம் அப்பா.அவர்கள் கூலியாகக் கிடைத்த மணிலாக் கொட்டையை ஒரு சிறு துணியில் கட்டிக்கொண்டு ஸாருக்குக் கொடுப்பார்களாம் அன்பாக.
சாப்பாடு,துணிக்கே வழியில்லாத மாணவர்களுக்கும் கல்வியளித்தது டேனிஷ் மிஷின் ஸ்தாபனம்.
இதில் அப்பாவின் காலடி பட்ட மண் எப்படியும் இருக்கும்..
அரசியலில் உயர்ந்தவர்களுக்குத்தான் நினைவிடமா? பெயர் சொல்லாமல் வளர்ந்திருக்கும் அவர்கள் இருந்த இடமும் ஒரு ஞாபகச் சின்னம்தானே!!!!!!!!!!!!
சனிக்கிழமையானாலும் பரவாயில்லை. போய்ச் சேர்ந்தோம் அவ்விடத்திற்கு.
ஸ்கூல் ஒரு கதவு திறந்திருந்தது. நாங்கள் வந்திருப்பதை உள்ளே சொல்லி அனுப்பினோம். உதவித் தலைமை ஆசிரியர் இருப்பதாகவும், எங்களை உள்ளே வரும்படியும் அழைப்பு வந்தது. யாவரும் போனோம்.
சிரித்த முகத்துடன் முகமன் கூறி வரவேற்றார். நான் எங்களைப் பற்றி, வந்த காரணம், எண்ணம், மனதினால் அஞ்சலி முதலான ஆசைகளுடன் வந்திருப்பதை விவரமாக எடுத்துக் கூறினேன். மேலும் பழைய ஆசிரியர்களின் புகைப் படங்கள் திறந்திருப்தைப் பார்க்கவும் வந்த விவரம் சொன்னேன்.
நான் கூறிய தகவல்களிலிருந்து, அவர் D.paul kijubakaran அவர்கள் பால் கிருபாகரன் பெயர் ஸரியா? அப்பாவின் வேலை ரிடயரான பின்பே பிறந்தவர். ஆனாலும் இவ்வளவு அன்புடன் அவ்விடம் நாங்கள் வந்திருப்பதைப் பாராட்டினார். படங்களுள்ள அறையையும் காண்பிக்கச் சொன்னார். அவ்விடமில்லாததால் பிறகு வந்தால் பார்க்க ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.
உங்களைப்போன்றவர்களின் வருகை பெருமை கொள்ளச் செய்கிறதென்று சொல்லி காஃபி முதலானது கொடுத்து உபசரித்தார்.
மேலும் எவ்வளவோ ஹிந்துக்கள், இவ்விடம் எல்லா சமயத்திலும் வேலை செய்து பெருமை சேர்ப்பதாகவும் கூறினார்.
அவருக்கு நன்றியை யாவரும் சொன்னதுடன் திங்களன்று அஸெம்பிளியில் நான் வந்துபோன விஷயம், மற்ற ஆசிரியர்கட்கும்,தலைமை ஆசிரியருக்கும்,பள்ளி மாணவர்கட்கும் தெரியப்படுத்துங்கள் என்று சொல்லி அவருடன் ஒரு புகைப் படமும் எடுத்துக் கொண்டு மிக்கப் பழகிய ஒருவரைப் பார்த்த மாதிரி ஸந்தோஷத்துடன் அடுத்து என்லிஸ்ட் என்ன என்ற கேள்வியுடன் ஸமீபத்தில் நூற்றாண்டு விழா நடந்ததாகக் கூறினார். அதையும் பார்ப்போம்.
எங்களை வரவேற்று உபசரித்த பால் கிருபாகரன் அவர்களுக்கு மிகவும் நன்றி. அவருடனான படம். அன்பும் மரியாதையும் கண்முன் நிற்கின்றது.
இவ்விடம் விக்டோரியா இந்து பாடசாலை என்ற இடத்தில் நான் நான்காவது வகுப்பு வரை படித்தேன். சுதந்திரத்திற்குப் பின் பெயர் மாறி இருக்குமே. என்றேன்.
பெயர் மாறாது இப்போதும் அது ஒரு சிறப்பான பள்ளியாகவே விளங்குகிறது என்றார். என்னுடைய விசாரிப்புகளும், மனமும் எப்படி இருக்கிறது பாருங்கள்.
அடுத்த இலக்கு ஐயன் குளம், அவ்விடமிருந்து அடி அண்ணாமலைக் கோயில்.
கோயில் போய்ச் சேர்ந்து விட்டோம்.
ஏகாதச ருத்திரம்,ஹோமம் எல்லாம் முடிந்து ஆதி அருணாஜலேசுவரர் ஸன்னிதியில் ஆகமவிதிகளின் பிரகாரம் பூஜை நடந்து கொண்டு இருந்தது. கர்பக்கிருஹத்தில் இவ்வளவு அருகாமையில் தரிசனம். தேவாரம்,திருவாசகம், யாவரும் சேர்ந்து இசைத்தது யாவும் கண் கொள்ளாக் காட்சி. ஏதோ கொடுத்து வைத்திருந்தோம். இவைகளைக்காண. மனம் குளிர வணங்கி விட்டு காரிலேயே கிரிவலமாகவந்து ஆங்காங்கே தரிசனங்களைக் கண்டு களித்து திரும்பவும் .ஸ்ரீசங்கரமடம் வந்து சேர்ந்தோம்.
பூஜை செய்தவர்களுக்கான, நிவேதனத்திற்காகச் செய்த உணவில்,பிரஸாதம் நாங்களும் சாப்பிட்டோம். சங்கரமடத்தை நினைவில் கொண்டு மற்றும் அங்கு வந்த உறவினர்களிடம் விடை பெற்று திரும்ப எங்கள் வண்டி சென்னை நோக்கி வந்தது. சங்கரமடத்தில் எல்லா நல்ல காரியங்களுக்கும் ஏற்பாடு செய்து தருகிரார்கள் என்பதை ஸந்தோஷத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். நம்மால் முடிந்ததை வேத பாடசாலைக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். மயிலத்திலிருந்து திருவருணை. திருவருணையிலிருந்து சென்னையாக அண்ணாமலை அருளியது.
Entry filed under: நான் விரும்பிய தரிசனங்கள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 2:36 பிப இல் ஜூன் 24, 2016
சண்டிகேஸ்வரர் சன்னதியில் சத்தப் படுத்தி வருகைப் பதிவை ரெஜிஸ்டர் செய்து விட்டுச் செட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். சமீபத்தில் சிலர் அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்றார்கள். எது சரியோ!
மனமார எல்லா பழகிய இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
2.
chollukireen | 2:29 பிப இல் ஜூன் 26, 2016
ஸ்வாமி ஸன்னிதியில், அம்மன் கொலுவிலே, ஸேவித்துப் போகிறேனென்று சிவனிடம் சொல்லு என்று சொல்வது வழக்கம். எல்லாக் கருத்துகளுக்கும் மாறுபட்ட கருத்து உண்டு. அம்மாதிரி இதுவும் ஒன்று. தமிழ்நாட்டை விட்டு வெளியிலேயே இருந்து விட்ட படியால் முக்கால் வாசி தெரிவதில்லை. அதுதான் உண்மை. அன்புடன்