Archive for திசெம்பர் 6, 2010
மட்டர் பரோட்டா
மட்டர் பரோட்டா செய்ய ப்ரோஸன் பட்டாணியை உபயோகித்தால்
சீஸன் இல்லாத சமயத்திலும் செய்ய முடிகிறது.
டிபன் டப்பாவில்லெடுத்துப்போக , மிருதுவாக இருக்கும்.
நான் சின்ன அளவில் செய்ய கணக்கு கொடுக்கிறேன்.
ஒரு 6, 7 செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்
பிசைவதற்கு.——கோதுமைமாவு—ஒன்றறைகப்
2 டீஸ்பூன்—எண்ணெய், துளி உப்பு
பூரணம் தயாரிக்க—-பச்சைப் பட்டாணி —-ஒன்றறைகப்
பச்சை மிளகாய்–2
சீரகப்பொடி, கரம் மஸாலாப்பொடி வகைக்கு கால் டீஸ்பூன்
தனியாப் பொடி, மாங்காய்ப்பொடிவகைக்கு அரை டீஸ்பூன்
எண்ணெய்–பூரணம் கிளற—3 டீஸ்பூன்
பரோட்டா செய்ய—வேண்டிய அளவு-எண்ணெய்,அல்லது, நெய்
ருசிக்கு உப்பு, ஒரு இதழ் உரித்த பூண்டு,
2 உறித்த ஸாம்பார் வெங்காயம்
செய்முறை.—
மாவுடன்,எண்ணெய், உப்பு கலந்து பிசறி சிறிது சிறிதாக
தண்ணீர் சேர்த்து ரொட்டி இடும் பதத்திற்கு மாவை மென்மையாகப்
பிசைந்து ஊரவிடவும்.
ப்ரோஸன் பட்டாணியைச் சுடு தண்ணீரில் சுத்தம் செய்து
வடிக்கட்டி வைக்கவும்.
வெங்காயம்,பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வடித்த பட்டாணியை
மிக்ஸியிலிட்டு ஜலம் விடாமல் நைஸாக அரைத்து எடுக்கவும்.
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதைச்
சேர்த்துக் கிளறவும்.அடி கநமான வாணலி நல்லது.
நிதான தீயில், விடாது கிளறி கலவை கெட்டியாகும்போது,பொடி
வகைகளையும், உப்பையும் சேர்க்கவும்.
கையில் ஒட்டாத பதம் வரும்படி கிளறி இறக்கவும்.
இம்மாதிரி, பூரணம் செய்து, ப்ரிஜ்ஜில் வைத்து எப்போது வேண்டுமோ
எடுத்தும் உபயோகிக்கலாம்.
இப்போது பரோட்டா தயாரிக்கலாம்
ஆறின கலவையை சமனாக உருட்டி வைக்கவும்.
மாவைச் சற்று பெறியதாக உருட்டி வைப்போம்.
மாவைச் சிறு வட்டமாக குழவியினால் இட்டு ,சிறிதுஎண்ணெயைத்
தடவி, அதன் மேல் பூரணத்தைச் சிறியவில்லையாகத் தட்டி வைத்து
வட்டத்தின் விளிம்பினால் பூரணத்தை மூடுவோம்.
ஆலுபரோட்டா, போளி செய்வது போல இதுவும் அதே முறைதான்
மேல் மாவில் உருண்டைகளைப் பிரட்டி, குழவியின் உதவியால்
பரோட்டாக்களாகச் செய்யவும்.
காயும், கல்லில் பரோட்டாவைப் போட்டு ,மேலே ஈர பதம் குறையும்
போதே திருப்பிப் போடவும். விளிம்பில் சற்று அழுத்தம் கொடுத்து,
நெய்யோ, எணெணெயோ மேலே ஸ்பூனினால் தடவி திருப்பவும்.
.நன்றாக உப்பிக் கொண்டு மேலெழும்பும்.
இப்பாகத்திலும் நெய் தடவி, திருப்பியினால் சற்று அழுத்தம் கொடுத்து
சிவக்க பரோட்டாக்களைச் செய்து எடுக்கவும்.
தயிர்,சட்னி கூட்டு கறி, ஊறுகாய், டால், ரொட்டியின் ஜோடி வகைகள்
என எதனுடனும் ருசிக்கலாம்.