Archive for நவம்பர் 23, 2022
கல்கண்டுப் பொங்கல்.
வழக்கமாகத் திங்களன்று ஏதாவது மீள்பதிவு செய்வேன். திங்ள் வந்து போனதே தெரியவில்லை. அவ்வளவு குளிர். இன்று கிடைத்த இந்தப் பதிவை ரஸியுங்கள். இனிப்பானது. அன்புடன்
நவராத்திரி விசேஶ நிவேதனப் பொருள் கல்கண்டுப் பொங்கலுடன் நான் வந்திருக்கிறேன்.
விசேஶமாக அதிகம் ஸாமான்களில்லாமல் இருப்பதைக் கொண்டு செய்ததிது.
வழக்கமான சில குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகி விட்டது.
அடிக்கடி செய்யும் பொங்லில்லை இது.
ஆதலால் செய்தபோது பதிவிடவேண்டும் என்று விருப்பம்.
வேண்டியவைகள்
சீரகச்சம்பா அரிசி—கால்கப்.
டைமண்ட் கல்கண்டு—முக்கால்கப்
பால்—ஒருகப்
ஏலக்காய்—இரண்டு
பாதாம்,முந்திரி,திராக்ஷை, எது கைவசமோ அதில் சிறிது.
செய்முறை
அடிகனமான பாத்திரம், எடுத்துக் கொள்ளவும்.
பாலுடன் ஸரி அளவு தண்ணீரும் கலந்து கொள்ளவும்.
அரிசியைக் களைந்து பாதி அளவு பால்க் கலவையுடன் தீயைஸிம்மில் வைத்து
அரிசியை வேக வைக்கவு்ம்.
அரிசி வேக வேக மீதிக் கலவையை சேர்த்துக் கொண்டே வரவும்.
நன்றாக வெந்தவுடன் கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
நான் இரண்டு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காயையும் சேர்த்தேன்.
ஏலக்காய் பொடித்து சேர்த்து நன்றாகக் கிளறவும். சற்று நீர்க்க ஆகிப் பிறகு
இறுகிவரும். எல்லாமே நிதான தீயில்தான்.
இறக்கிவைத்து நெய்யில் முந்திரி,பாதாம்,திராக்ஷை எது இருக்கிறதோ அதை வறுத்துப்
போடவும். குங்குமப்பூ போட்டால் அதிக வாஸனையுடன் கலரும் அழகாக வரும்.
நவராத்திரி. அம்மனுக்கு நிவேதனம் செய்யவும்.ஒருஸ்பூன் சாப்பிட்டாலும், ருசியாக
இருக்கும். நிவேதனப் பொங்கல் அல்லவா?
நல்ல நெய் முந்திரி வறுக்கப் போதுமானதிருந்தால்ப் போதும்.
சுலபமாகத்தானிருக்கு. என்ன கல்கண்டுதான் வாங்க வேண்டும்.
சின்ன அளவில்ச் செய்தது. ருசித்து மகிழுங்கள்.