Archive for ஏப்ரல் 19, 2010
வாழைக்காய்க் கறி
நல்ல முற்றிய வாழைக்காயில் கறி செய்தால் நன்றாக வரும்.
மொந்தன் காய்தான் நன்றாக இருக்கும். சாதாரணமாக இது எங்குமே
கிடைக்கின்றது.
வேண்டியவைகள் —வாழைக்காய்—2
பச்சை மிளகாய்——3
தேங்காய்த் துருவல்—-அரைகப், அல்லது விருப்பம் போல்
தாளிக்க எண்ணெய்——–3 டேபிள் ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்
கறி வேப்பிலை—– கொஞ்சம்
ருசிக்கு—–உப்பு
மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி—-சிறிதளவு
சின்ன அளவில் புளி
செய்முறை——-வாழைக்காயை அலம்பித் தோல் சீவி திட்டமான
துண்டங்களாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வாழைக்காய் கறுப்பாகாமல் இருக்க புளியை சிறிது ஜலம் விட்டு
ஊற வைத்துக் கொண்டால் உதவியாக இருக்கும்.
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயைத் தண்ணீர் விடாமல்
மிக்ஸியிலிட்டு ஒன்றிரண்டாக மசித்து எடுக்கவும்.
நன்றாக அலம்பிய காய்த் துண்டுகளை ,துண்டுகள் அமிழ
ஜலம் விட்டு, புளித் தண்ணீர்,மஞ்சள் பொடி சேர்த்து ,அடுப்பில்
வைத்து வேகவிட்டு மிகவும் அளிந்து போகாமல் சரியான பதத்தில்
இறக்கித் தண்ணீரை வடிக் கட்டவும்.
வெந்த காயுடன் உப்பு, தேங்காய்க் கலவையைப் பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, காயம் கடுகு,பருப்பு
வகைகளைத் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பிசறி
வைத்துள்ளதைப் போட்டு நன்றாக வதக்கி இறக்கவும். இது
ஒரு வகை.
இதே வகையில் தேங்காய் சேர்க்காமல் காயை வதக்கி, கறிப்பொடி
உப்பு சேர்த்து மேற் கூரியவாறே தாளிதத்துடனும் ஒரு வகை
செய்யலாம்.
தாளிதத்துடன், தனியா, சீரகம், மிளகாய்ப் பொடி சேர்த்தும் வதக்கலாம்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் உபயோகித்தால் ருசி கூடும்.
சமயத்தில் எதுவும் தயார் இல்லை என்றால் சாம்பார் பொடியோ,
ரஸப் பொடியோ, கரம் மஸாலாவோ. மற்றும் ரெடிமேட் மஸாலாவோ
காயுடன் சேர்த்து வதக்கலாம். மற்றும் சில வகைகளையும் பார்க்கலாம்.
காய் வதங்கும் போது உப்பு காரம் சேரும்படி சட்டுவத்தால் சற்று மசித்துக்
கிளறவும்.
மல்லி ரைஸ்
வேண்டியவைகள்—மெல்லிய ரக அரிசி—1கப். உதிர் உதிராக சாதம்
வடித்து ஆறவைக்கவும்.
நல்ல இளசான பச்சைக் கொத்தமல்லி வேர் நீக்கி அலம்பி சுத்தம்செய்து நறுக்கியது—–2கப்பிற்கு அதிகமாகவே இருக்கலாம்.
புளி——ஒரு சின்ன நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய்-ஒன்று.
நல்லெண்ணெய்—–2 டேபில்ஸ்பூன்.
கடுகு –அரை டீஸ்பூன்
சீரகம்–அரைடீஸ்பூன்
பெருங்காயப்பொடி—-கால் டீஸ்பூன்
வறுத்த முந்திரிப் பருப்பு—-8
செய்முறை—–கொத்தமல்லி, புளியை தண்ணீர் விடாமல், கெட்டியாக
அரைத்தெடுக்கவும்.
வேர்க் கடலையோ, முந்திரிப் பருப்போ, வறுத்ததை ஒன்றிரண்டாகப்
பொடித்துக் கொள்ளவும்.
நான் ஸடிக் பேனில் எண்ணெயைக் காயவைத்து கடுகு பெருங்காயம்,மிளகாய்
சீரகம் தாளித்து ,அரைத்த விழுதை ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கொட்டி
நன்றாக வதக்கவும். எண்ணெய் பிரியுமளவிற்கு சுருள வதக்கி இறக்கவும்.
வேண்டிய அளவு உப்பு சேர்த்து கலவையை சாதத்தில் கொட்டிக் கலக்கவும்.
பொடித்த பருப்பையும் சேர்த்துக் கலந்து உபயோகிக்கவும்.
துளி சர்க்கரை சேர்ப்பது, பச்சைக் கலர் மாறாமல் இருப்பதற்காக.
மல்லி ரைஸ் பற்றியும் நான் தெரிந்து கொண்டது ஒரு சமையல்க்
கலைஞரிடம்தான். நமக்குத் தோன்றும் துவையல் சாதம் என்று.
ஆனால் பந்தியில் வகைகளில் ப்ளஸ் ஒன்றாகத் தோன்றியது.