Archive for ஏப்ரல் 20, 2010
காலிப்லவர் கறி
வேண்டியவைகள்——சின்னதாக ஒரு பூ. சிறிய பூக்களாக நறுக்கி
அளந்தால் 4 கப் அளவிற்கு
வெங்காயம்—-2
பூண்டு—–5 இதழ்கள்
பச்சை மிளகாய் —-3 நீட்டுவாக்கில் நறுக்கவும்.
தக்காளி—-2 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிது
கடுகு, சீரகம்—தலா அரைடீஸ்பூன்
கரம் மஸாலா—–அரை டீஸ்பூன்
ருசிக்கு உப்பு, சிறிது மஞ்சள்பொடி
எண்ணெய்—-3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித் தழை சிறிது
செய்முறை—–நறுக்கிய துண்டங்களில் மூழ்கும் அளவிற்கு கொதிக்கும்
தண்ணீரைக் கொட்டி 10 நிமிஷங்கள் தட்டினால் மூடிவைக்கவும்.
ஆறியபின் தண்ணீரை வடிக்கட்டவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து
பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், இஞ்சியையும்,
மிளகாயையும் நன்றாக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து
வதக்கவும்.
உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வடிக்கட்டிய காலிப்லவரைச் சேர்த்து
நன்றாகக் கலந்து நிதானமான தீயில் சரியான மூடியினால் மூடித்
திறந்து கிளறி வதக்கவும். நன்றாக வதங்கியதும், மஸாலாப்பொடி
சேர்த்துக் கலந்து சில நிமிஷம் வைத்து இறக்கவும்.
கொத்தமல்லியைத் தூவவும்.
உருளைக் கிழங்கு சேர்த்தும் செய்யலாம். சரிபாதி, கிழங்கும் பூவுமாக
நறுக்கி அலம்பி, இறுத்து மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு 2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு, மஞ்சள் சேர்த்துக் கலந்து 7–8 நிமிஷங்கள் .ஹை
பவரில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
மற்றபடி சற்று காரம் அதிகம் சேர்த்து முதலில் கூரிய வகையிலேயே
தாளிதம் செய்தும் செய்யலாம்.
மைக்ரோ வேவில் வேகவைத்து செய்தால் சற்று உதிர் உதிராக
சுலபமாக சீக்கிரம் செய்ய முடிகிரது.
அதிகம் வெங்காயம் சேர்த்துவதக்கி, பூவைச் சேர்த்து வதக்கியும்
உப்பு கறிப்பொடி, சிறிது எலுமிச்சைசாறு சேர்த்தும் செய்யலாம்.
கேரட், கேப்ஸிகம் ,பட்டாணி, கிழங்கு. சேர்த்தும் செய்யலாம்.
உப்பு,காரம், எண்ணெய், சரிவர ஒழுங்கான தீயினில் சமைத்தால்
நமது விருப்பத்திற்கிணங்க கூட்டுப் பொருட்களைச் சேர்த்துச்
சமைத்து ருசி கூட்டலாம்.
வாழைக்காய் பொடிமாஸ்
இதுவும் ஒரு சுலபமான முறைதான்
வேண்டியவை—2 முற்றிய வாழைக்காய்
பச்சைமிளகாய்—3
இஞ்சி—–ஒரு துண்டு
கடுகு—-1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு வகைக்கு 2 டீஸ்பூன்
எண்ணெய்——2 டேபிள் ஸபூன்
வேகவைத்துப் பிழிந்த துவரம் பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல்—-அரைகப்
புளிப்பிற்கு வேண்டிய அளவு—-எலுமிச்சை சாறு
பச்சைக் கொத்தமல்லி—-நறுக்கியது—-2 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு
செய்முறை—-வாழைக்காயை 2, 2, துண்டங்களாக நறுக்கி தோலுடன்
அலம்பி, அமிழ ஜலம் வைத்து பாத்திரத்தில் வேகவைத்து வடிக்கட்டவும்
ஆறியவுடன் பழம் உறிப்பதுபோல் தோலை உறித்துவிட்டு உட்பகுதியை
உதிர்த்துக் கொள்ளவும். காய் முக்கால் பாகம் வெந்தால் போதும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, பருப்பு வகைகளைத்
தாளித்து, நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாயை வதக்கி, காயை உப்பு
மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
தேங்காய் வெந்த பருப்பு, சேர்த்து வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி, லேசான எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகிக்கவும் .
காரம், வெங்காய பூண்டு வாஸனை வேண்டுபவர்கள் தேவைப்
படுவதைத் தாளிதத்தில் சேர்த்து வதக்கிக் கூட்டவும்.