Archive for மே, 2010
காய்கறி ஸாகு
இதுவும் ஒருவிதக் காய்கறிக் கலவையின் கூட்டே.
சுலபமாகவும் செய்யலாம்.
வேண்டியவைகள்.
உருளைக் கிழங்கு ——2 தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்.
கேரட்—-2
பச்சைப் பட்டாணி—அரைகப்
பொடியாக நறுக்கிய—பீன்ஸ், கோஸ் தலாஅரைகப்
காப்ஸிகம்—-2 .துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நூல்கோல், காலிப்லவரும் சேர்க்கலாம்.
தாளிக்க நறுக்கிய வெங்காயம் ஒன்று
எண்ணெய்—1 ‘ டேபிள் ஸ்பூன்ஸ்பூன், கடுகு—அரைடீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு—-1 டீஸ்பூன் லவங்கப் பட்டை சிறிது
பெருங்காயப்பொடி–அரை டீஸ்பூன்
தேவைக்கு—-உப்பு.- மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
அரைப்பதற்கு—–3 பச்சை மிளகாய்
பொட்டுக் கடலை[உடைத்தது]—–2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய்— அரைகப்
மிளகு-அரை டீஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
தனியா–2 டீஸ்பூன்.
மேலே தூவ
நெய் சிறிது, முந்திரி 5, 6 .
பச்சைக் கொத்தமல்லி —சிறிது
செய்முறை—-நறுக்கிய காய்களை அலம்பி வடிக்கட்டவும்.
அரைக்கக் கொடுத்திருப்பவற்றை மிக்ஸியிலிட்டு சிறிது
ஜலம் சேர்த்து நனறாக அறைத்தெடுக்கவும்.
வாணலியி்ல் எண்ணெயில் கடுகு,பருப்பு,காயம் தாளித்து
வெங்காயத்தை நன்றாக வதக்கி காய்கறிகளையும் சேர்த்து
சிறிது வதக்கி திட்டமாக ஜலம் சேர்த்து வேக வைக்கவும்.
உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும். நிதான தீயில் காய்கள்
வெந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து
கொதிக்க வைத்து இறக்கி ,ஒடித்த முந்திரியை நெய்யில்
வறுத்துச் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி
உபயோகிக்கவும்.
தோசை, ரொட்டி,பூரி என எல்லாவற்றுடனும் சேர்த்து
சாப்பிடலாம்.
மற்ற காய்களும் சேர்க்கும் போது தக்காளியும் சேர்க்கலாம்.
பச்சை மாங்காய்த் துவையல்.
சுலபமாகத் தயாரிக்கலாம். கிரீன் சட்னி, ரெட்சட்னி, ஒயிட்
சட்னி வகையில் இது கிரீன்சட்னி.
வேண்டியவைகள்
திட்டமான மாங்காய்—1 தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய்—3 நறுக்கிக் கொள்ளவும்.
புதினா இலைகள்—–2 கப்
பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது 1கப்
வெங்காயம்—- 1
தேங்காய்த் துருவல்—-கால்கப்
இஞ்சி—சிறிய துண்டு
ருசிக்கு—உப்பு
செய்முறை–குறிப்பிட்டிருக்கும் யாவற்றையும் மிக்ஸியில்
இட்டு ஜலம் விடாமல் கெட்டியாக அறைத்து எடுக்கவும்.
உப்பு காரம் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
ருசியான சட்னியை வேண்டிய அளவு தளர்த்திக்கொண்டு
போண்டா, பஜ்ஜி, பகோடாக்களுடனும், கெட்டியாக தோசை,
ரொட்டி, பூரி வகைகளுடனும் உண்ணலாம். பிரிஜ்ஜில் வைத்து
2—3 நாட்சள் உபயோகிக்கலாம். ஸாண்ட்விச்சிற்கும் ஏற்றது.
தக்காளித் தொக்கு
வேண்டியவைகள்
நல்ல கெட்டியான தக்காளிப் பழம்——-1 கிலோ
காய்ந்த புளி—1 பெரிய எலுமிச்சை அளவு
இஞ்சி—-100 கிராம்
பொடிக்க
வற்றல் மிளகாய்—-15
கடுகு——2டீஸ்பூன்
வெந்தயம்—-1டீஸ்பூன்
சீரகம்—-2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—3 டீஸ்பூன்
தாளிக்க [வதக்க]—-நல்லெண்ணெய் அரைகப்
ருசிக்கு—-உப்பு
செய்முறை —-அகன்ற ஸ்டீல் பாத்திரத்தில் சுத்தம் செய்த
தக்காளியைப் போட்டு, அதன்மேல் பழங்கள் அமிழும்படி
வேரொரு பாத்திரத்தில் கொதிக்க வைத்தத் தண்ணீரைவிட்டு
மூடி வைக்கவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில், சிவக்க வறுக்கவும.
கடுகு, சீரகத்தையும் வெறும் வாணலியில் வறுக்கவும்.
நிதான தீயில் அரை ஸ்பூன் உப்புப் பொடியுடன் மிளகாயையும்
கறுகாமல் வறுத்தெடுக்கவும்.
மிளகாயைத் தனியாகவும், கடுகு,வெந்தயம், சீரகத்தைத்
தனியாகவும். பொடித்துக் கொள்ளவும்.
தண்ணீர் ஆறியவுடன் நீரை வடித்துவிடவும்.
தக்காளியின் தோல் உறிக்க வரும். ஒவ்வொரு தக்காளியாக
எடுத்துத் தோலை உறிக்கவும்.
இஞ்சியைத் தோல் நீக்கிப் .பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளி, இஞ்சியுடன் புளியையும் பிய்த்துப் போட்டு மிக்ஸியில்
தண்ணீர் விடாமல் அரைத்தெடுக்கவும்.
அடி அகலமான நான் ஸ்டிக் வாணலியில் பாதி எண்ணெயைக்
காயவைத்துச் சிறிது கடுகைத் தாளித்து அறைத்த விழுதைக்
கொட்டிக் கிளறவும்.
குறைந்த தீயில் அடிக்கடி கிளறி மூடவும்.
மிகுதி எண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
தண்ணீர் வற்றி கலவை சுருண்டு வரும் போது உப்பு,
மஞ்சள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும்
சுருளக் கிளறி, கீழ் இறக்கி மிளகாய்,கடுகு சீரக வெந்தயப்
பொடிகளைச் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் போதாவிட்டால்
கிளறும் போதே சற்று அதிகம் சேர்க்கவும். ஆறியபின் பிரிஜ்ஜில்
வைத்து உபயோகிக்கவும். வெய்யில் காலம். எண்ணெய் பிறிந்து
வருமளவிற்கு கெட்டியாக பொருமையாகக் கிளறவும்.
காற்றுப் புகாத பாட்டில்களில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.
ஜவ்வரிசி வடை
வேண்டியவைகள் ஜவ்வரிசி—–1கப் வேர்க்கடலை—முக்கால் கப் தயிர்—1கப் திட்டமான சைஸ்—-உருளைக் கிழங்கு 1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2 நறுக்கிய கொத்தமல்லித் தழை கால்கப் மிளகுப் பொடி–அரை டீஸ்பூன் சீரகம்—அரை டீஸ்பூன் தேவைக்கு–உப்பு பொரிப்பதற்கு வேண்டிய- எண்ணெய் செய்முறை——ஜவ்வரிசியைக் களைந்து இறுத்து தயிரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக் கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வேர்க்கடலையை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். ஊறின ஜவ்வரிசியை அழுத்திப் பிழிந்தெடுக்கவும். வேர்க் கடலைத் தூள், […]
மாங்காய்ப் பிசறல்
இது மிகவும் சுலபமானது.
வேண்டியவைகள்.
புளிப்பில்லாத பிஞ்சு மாங்காய் 2
பச்சை மிளகாய் —சின்னதாக 1
இஞ்சி—சிறிய துண்டு
ருசிக்கு—உப்பு
தாளித்துக் கொட்ட 1 டீஸ்பூன் எண்ணெய்
துளி கடுகு, பெருங்காயப் பொடி சிறிது
செய்முறை-—–மாங்காயை உள்ப் பருப்பு நீக்கி பொடிப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கி
மாங்காயுடன் உப்பு சேர்த்துக் கலக்கி , கடுகு, பெருங்காயத்தைத்
தாளித்துக் கொட்டி உபயோகிக்கவும்.
எல்லாச் சாப்பாட்டுடனும் உடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
ஒரு கேரட்டைச் சீவி பொடியாக நறுக்கியும் கலக்கலாம்.
நூல்கோல் புளிக்கூட்டு
வேண்டியவைகள்—-3திட்டமான நூல்கோல். தோல் நீக்கி ஒரே
மாதிரி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தனியா—-1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு—-2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்
வற்றல் மிளகாய்—3
மிளகு—1 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
தேங்காய்த் துருவல்—-அரைகப்
வேகவைக்கத் துவரம் பருப்பு—-முக்கால் கப்
தாளிக்க எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
புளி—1 சின்ன எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம் 1
கடுகு, கறிவேப்பிலை, பச்சைக் கொத்தமல்லி
செய்முறை—-புளியை சுடு நீரில் ஊறவைத்து கறைத்துக்
கொள்ளவும். 2 கப் அளவிற்கு.
பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து திட்டமான
ஜலத்துடன் ப்ரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
தனியா,மிளகு,மிளகாய் பருப்புகளை எண்ணெயில் சிவக்க
வறுத்து எடுக்கவும்.
தேங்காயையும், லேசாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்தவைகளை மிக்ஸியிலிட்டு சிறி்து தண்ணீர் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில், கடுகு, பெருங்காயம் தாளித்து நறுக்கிய
நூல்கோல் துண்டுகளை அலம்பிப் போட்டு வதக்கி
நறுக்கிய தக்காளியையும் சேர்த்து திட்டமாகத் தண்ணீர்
விட்டு வேக வைக்கவும். காய் வெந்ததும், புளித் தணணீர்,..
உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
புளி வாஸனை போனவுடன் வெந்த பருப்பு,அரைத்த
கலவையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி, கொத்த
மல்லி, கறிவேப்பிலை சேர்த்து உபயோகிக்கவும்.
வெள்ளைப் பூசணிக்காய், சௌசௌ, முதலானவைகளிலும்
செய்யலாம்.
வேண்டியவர்கள் சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும்
வதக்கி அரைக்கும் சாமான்களுடன் சேர்த்து அரைத்துக் கலந்தும்
உபயோகிக்கலாம்.
பருப்பு வேகும் போதே ஒருபிடி வேர்க்கடலை சேர்த்து
வேகவைத்தும் சேர்க்கலாம்.
கூட்டு என்பதால் ஜலம் எல்லாவற்றிலும் அளவாகச்
சேர்க்கவும்.
காஞ்சீபுரம் இட்லி
வேண்டியவைகள்
பச்சரிசி—–முக்கால் கப்
புழுங்கலரிசி—-முக்கால்கப்
நல்ல வெள்ளை உளுத்தம் பருப்பு—1 கப்
முந்திரிப் பருப்பு—10 சிறியதாக உடைத்துக் கொள்ளவும்.
கடுகு—-1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு—1டேபிள் ஸ்பூன்
மிளகு, சீரகம்–ஒவ்வொரு டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—-கால் டீஸ்பூன்
இஞ்சித் துண்டுகள்—-1 டீஸ்பூன்
தேவைக்கு—உப்பு
நல்லெண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
நெய்——-2 டேபிள் ஸ்பூன்
கரிவேப்பிலை—–சிறிது.
தயிர் 1 ஸ்பூன்
செய்முறை.
அரிசி, பருப்பைக் களைந்து தனித் தனியே ஊற வைக்கவும்.
மிக்ஸியிலோ, கிரைண்டரிலோ அரிசியை ரவைபோலவும்,
பருப்பைக் கெட்டியாகவும் அதிகம் தண்ணீர் விடாமல் நன்றாக
அரைத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன், தயிரும் திட்டமாக உப்பும் சேர்த்து மாவுகளை
ஒன்றாகச் சேர்த்துக் கரைத்து 7, 8 மணி நேரம் ஊற விடவும்.
இட்லி வார்ப்பதற்கு முன் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப்
பொடித்துச் சேர்க்கவும்.
எண்ணெயில் கடுகு,பருப்பு வகைகளைத் தாளிக்கவும்.
நெய்யில் முந்திரியை வறுத்து இஞ்சி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து வதக்கி மாவில் கலக்கவும்
மிகுதி எண்ணெய், நெய்யையும் மாவில் கலக்கவும்.
சாதாரணமாக இட்லி வார்ப்பது போல எண்ணெய் தடவிய
ஸ்டேண்டில் மாவை வார்த்து ஸ்டீம் செய்து எடுக்கலாம்.
ஸ்டீம் செய்யும் நேரம் குறைந்தது 20 நிமிஷங்கள் வேண்டும்.
தட்டையாக விளிம்புள்ள தட்டில் எண்ணெய் தடவி மாவை
விட்டு ஸ்டீம் செய்து எடுத்து, இட்லியைத் துண்டு செய்தும்
உபயோகிக்கலாம். ஸ்டீல் டம்ளர்களில் , கப்புகளில் எண்ணெய்
தடவி மாவை விட்டு ஸ்டீம் செய்தும் துண்டு செய்யலாம்.
ஆக மொத்தம் மாவை இட்லிகளாகச் செய்து விருப்பமான
சட்னிகளுடன் சேர்த்து உபயோகிக்கவும்.
ஆவக்காய் மாங்காய்.
இந்த ஊறுகாய் நிறைய மாதங்கள் வரை கெட்டுப் போகாது.
பிரிஜ்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. சரியான முறையில்
பாதுகாத்தால் நல்ல ருசியைக் கொடுக்கும்.
வேண்டியவைகள்.—–நல்ல புளிப்புள்ள முற்றிய மாங்காய் 12
அலம்பி துடைத்து பெரிய துண்டுகளாக உள் ஓட்டுடன் வெட்டிக்
கொண்டு , உள் பருப்பை மட்டிலும் நீக்கி பரவலாக தாம்பாளத்தில்
ஒரு மணி நேரம் உலர்த்திக் கொள்ளவும்.
சிவப்பு மிளகாயில் தயாரித்த மிளகாய்ப் பொடி–கால்கிலோ
கடுகு —-150 கிராம். நன்றாக வெய்யிலில்க் காயவைத்து மிக்ஸியில்
நைஸாக பொடித்துக் கொள்ளவும்.
வெந்தயம்— 50 கிராம். வெய்யிலில் காய வைத்து சுத்தப்
படுத்தி வைத்துக் கொள்ளவும்.
நல்லெண்ணெய்—-அரைகிலோ
உப்பு —பொடித்தது—-150 கிராம்.
மஞ்சள் பொடி—3 டேபிள் ஸ்பூன்
ஊறுகாயில் விறுப்பத்திற்கிணங்க சேர்க்கக் கூடியவைகள்
வெய்யிலில் காயவைத்து உறித்த பூண்டு–100 கிராம்
சுத்தப் படுத்திய கொண்டைக் கடலை–100 கிராம்
சுத்தப் படுத்திய முறுங்கைக்காய்த் துண்டுகள் 15 ஐ
துடைத்து வைக்கவும்.
ஒரு களிம்பேராத பாத்திரத்தில் மிளகாய்ப் பொடி, உப்பு, வெந்தயம்
கடுகுப்பொடி மஞ்சள்பொடி இவற்றை ஒன்றுசேர்த்து
கலக்கி எண்ணெயைச் சேர்த்து பஜ்ஜி மாவு போலக்
கலக்கவும்.
நல்ல ஜாடியை வெய்யிலில் காயவைத்துத் தயாராக வைக்கவும்.
அகன்ற தாம்பாளத்தில் மாங்காய்த் துண்டுகளைச் சிறிது சிறிதாக
போட்டு எண்ணெய்க் காரக்கலவையை மேலே போட்டுப் பிசறி
ஜாடியில் நிரப்பவும். பூரா கலவையைச் சேர்க்கவும்.
பூண்டு, கடலை எது விருப்பமோ அதை மாங்காயுடனே சேர்த்து
விடவும்.
ஜாடியைத் துணியினால் வாயைக்கட்டி ஒருநாள் வெய்யிலில்
வைத்து எடுக்கவும்.
அடிக்கடி உலர்ந்த மரக் கரண்டியினால்க் கிளறி மூடவும்.
நல்ல சைஸ் மாங்காய்க்கான அளவு இது.
உப்பு ருசிக்கேற்ப பின்பும் சிறிது கூட்டலாம்.
வெந்தயம் வறுக்கவோ பொடிக்கவோ வேண்டாம்.
எண்ணெய் .அதிகம் இருந்தால்தான் ஊறுகாய்
.கெடாமலிருக்கும்
யோசனையாக இருந்தால் பின்னுமொரு நாள் முதலிலேயே
வெய்யிலில் வைக்கவும்.
ஊற ஊற ருசியாக இருக்கும். ஊறின பிறகு எப்பொழுதாவது
கிளறினால்ப் போதும். காற்றுப் புகாமல் அழுத்தமாக மூடி
உபயோகிக்கவும். பூண்டு போடாவிட்டால் பெருங்காயம்
ஒரு பெரிய கோலி அளவிற்குப் பொடித்துச் சேர்க்கவும்.