Archive for மே 7, 2010
நூல்கோல் புளிக்கூட்டு
வேண்டியவைகள்—-3திட்டமான நூல்கோல். தோல் நீக்கி ஒரே
மாதிரி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தனியா—-1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு—-2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்
வற்றல் மிளகாய்—3
மிளகு—1 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
தேங்காய்த் துருவல்—-அரைகப்
வேகவைக்கத் துவரம் பருப்பு—-முக்கால் கப்
தாளிக்க எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
புளி—1 சின்ன எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம் 1
கடுகு, கறிவேப்பிலை, பச்சைக் கொத்தமல்லி
செய்முறை—-புளியை சுடு நீரில் ஊறவைத்து கறைத்துக்
கொள்ளவும். 2 கப் அளவிற்கு.
பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து திட்டமான
ஜலத்துடன் ப்ரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
தனியா,மிளகு,மிளகாய் பருப்புகளை எண்ணெயில் சிவக்க
வறுத்து எடுக்கவும்.
தேங்காயையும், லேசாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்தவைகளை மிக்ஸியிலிட்டு சிறி்து தண்ணீர் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில், கடுகு, பெருங்காயம் தாளித்து நறுக்கிய
நூல்கோல் துண்டுகளை அலம்பிப் போட்டு வதக்கி
நறுக்கிய தக்காளியையும் சேர்த்து திட்டமாகத் தண்ணீர்
விட்டு வேக வைக்கவும். காய் வெந்ததும், புளித் தணணீர்,..
உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
புளி வாஸனை போனவுடன் வெந்த பருப்பு,அரைத்த
கலவையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி, கொத்த
மல்லி, கறிவேப்பிலை சேர்த்து உபயோகிக்கவும்.
வெள்ளைப் பூசணிக்காய், சௌசௌ, முதலானவைகளிலும்
செய்யலாம்.
வேண்டியவர்கள் சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும்
வதக்கி அரைக்கும் சாமான்களுடன் சேர்த்து அரைத்துக் கலந்தும்
உபயோகிக்கலாம்.
பருப்பு வேகும் போதே ஒருபிடி வேர்க்கடலை சேர்த்து
வேகவைத்தும் சேர்க்கலாம்.
கூட்டு என்பதால் ஜலம் எல்லாவற்றிலும் அளவாகச்
சேர்க்கவும்.