Archive for ஏப்ரல் 28, 2010
மனோகர பருப்புத் தேங்காய்
அநேகமாக எல்லா சுப விசேஷ விழாக்களுக்கும் முக்கியமான அங்கமாகக்
கருதப் படுவது இந்த இனிப்புப் பண்டம். ஜோடியாக இரட்டைக் கூம்பு
வடிவத்தில் பலவித இனிப்புக்களை உள்ளடக்கி மங்களகரமாக பூவுடனும்
பொட்டுடனும் உடன் வெற்றிலை பாக்கு மஞ்சளுடன் பழங்கள் சூழ
ப்ரத்யேகமான தட்டில் அழகுடன் வைப்பார்கள். தாய்வீட்டு வரிசைப்
பொருளில் முன்னிலைப் படுத்தப்படும் இனிப்பு இது. இதற்குத் தனி
மரியாதையும், கவனிப்பும் உண்டு இதன் பலவிதத்தின் ஒரு
விதத்தைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்——-பருப்புத் தேங்காய்க் கூடு
தேன் குழல் மாவில் இதைச் செய்யலாம். கடலை மாவுடன்
அரிசிமாவு கலந்து தேன்குழல் மாதிரியே பிழிந்தும் செய்யலாம்.
உப்பு,எள் முதலானது போடாமல் செய்ய வேண்டும்.
முதலில் பணியாரக் கூட்டை சுத்தம் செய்து ஈரமில்லாமல் துடைத்து
நெய்யை நன்றாகத் தடவி வைக்க வேண்டும்.
கூட்டின் கூம்புப் பகுதியில் மெல்லியதாகக் கிழித்த பேப்பரைச்
சுருட்டி அடைக்க வேண்டும். அரை அங்குலப் பகுதி அடைத்தால்
போதும்.
கூட்டின் கொள் அளவை அளந்து கொள்ளவும்.
வாய்க் குறுகலான சொம்பிலோ, கூஜாவிலோ கூட்டைத் திருப்பி
கூர்முனை கீழாக வரும்படியும், அகன்ற பாகம் மேலே வரும்படியும்
சரியாக வைக்கவும்.இரண்டு செய்வதற்காக
கூட்டின் அளவைப் போல் இரண்டு பங்கு ஒடித்த தேன்குழல்
செய்து கொள்ளவும்.
அதாவது 6பங்கு்அரிசியும், 1 பங்குஉளுத்தம் பருப்பும் கலந்து அறைத்தமாவில் செய்தது.
அல்லது 2 பங்கு கடலைமாவும், 1 பங்கு அரிசி மாவும் சேர்த்து
தேன் குழல் அச்சில் செய்தது.
ஒடித்த தேன் குழலின் நான்கின் ஒரு பாகம் பாகு வெல்லம்
வேண்டும்.
வாஸனைக்கு ஏலக்காய்ப் பொடி.
செய்முறை——அகன்ற பாத்திரத்தில் வெல்லத்தூளைப் போட்டுக்
குறைந்த அளவில் சிறிது ஜலம் சேர்த்து் நிதான தீயில் வைத்து
இலைக் கரண்டியால் கிளறிவிட்டு பாகைக் காய்ச்சவும்.
பாகு சற்றுக் குறுகி வரும்போது துளி பாகைத் தண்ணீரில்
விட்டால் கெட்டியாக உறைவதை தொட்டுப் பார்த்து உணர
முடியும்.
இந்தப் பதத்தில் ஏலப்பொடியுடன் உடைத்து வைத்திருப்பதைக்
கொட்டிக் கிளறி அடுப்பைஅணைத்து விடவும்.
கூட்டில் சிறிதளவு கலவையைப் போட்டு மத்தாலோ கரண்டியாலோ
அழுத்தம் கொடுத்து தட்டித் தட்டி மேற்கொண்டு போட்டு, கூட்டை
நிரப்பி, சமனாக தட்டையாக கெட்டிப் படுத்தவும்.
உதாரணத்திர்கு ஒரு டம்ளர் பிழிந்த முருக்கு இதற்கு கால்
டம்ளர் வெல்லம் போதும்.
அதே டம்ளரிலேயே நெய் தடவி பாகில் போட்ட முறுக்கை
அடைத்து செய்து பார்க்கவும்.
அளவு சரியாக வரும். உதாரணத்திற்கு முறுக்கு என்றுஎழுதுகிறேன்.
கூட்டிலிருந்து எடுப்பதற்கு சற்று கூட்டை லேசாக சூடு படுத்தித்
ஒரு மணையின் மீது தட்டினால் கழன்று வந்து விடும்.
கலவை ஜாஸ்தியாகயிருந்தால் மிகுதியை உருண்டைகளாக
செய்து கொள்ளலாம்.
வறுத்த வேர்க்கடலை, பொட்டுக் கடலை, பொரி இப்படி பல
பொருள்களில் தயாரிக்கலாம். உருண்டைகளுக்கு பாகு நல்ல
கம்பிப் பதம். பருப்பு தேங்காய்க்கு பாகு சற்று முற்றிய பதம்.
தேங்காய் பர்பி. மைசூர் பாகு,ரவை, பிஸ்கெட்,மிட்டாய் என
எல்லாக் கலவைகளிலும் செய்யலாம்.ஒவ்வொரு கூடாக
இரண்டு முறை செய்து ஜோடி செய்யவும்.
குறிப்பாக, என்னுடைய நேயம்மிக்க சிநேகிதி லலிதா அவர்களின்
பெண் ஷீலா விரும்பிக் கேட்டதற்கிணங்க இதை சினேகிதியின்
ஞாபகார்த்தமாக மனதிற் கொண்டு எழுதியிருக்கிறேன்.
இதை எங்கள் பக்கம் பணியாரம் என்று சொல்லுவோம்..
முந்திரிப் பருப்பு பணியாரம் விசேஷமானது.