Archive for ஜூலை 25, 2010
பீன்ஸ் அவரை பருப்புசிலி
பீன்ஸ் அவரைக்காய் சேர்த்தோ, அல்லது தனியாகவோ கொத்தவரைக் காயிலோ பருப்புசிலி நன்றாக இருக்கும்.
வேணடியவைகள்—அரைகப் துவரம் பருப்பு
கால்கப்—-கடலைப் பருப்பு
வற்றல் மிளகாய்—-5 காரத்திற்கு வேண்டியளவு
ருசிக்கு –உப்பு
காய்—–நறுக்கியது [பொடியாக] கால்கிலோ
பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி—அரை டீஸ்பூன்
எண்ணெய்—4 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி–சிறிது
கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை——-பருப்புகளைக் களைந்து 2 மணிநேரம் தண்ணீரில்
ஊற வைத்து நீரை ஒட்ட வடிக்கட்டி,மிளகாய் பெருங்காயம்
சேர்த்து கரகர பக்குவத்தில் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
அரைத்த கலவையை, மைக்ரோவேவின் அகலமான தட்டில்
எண்ணெய் தடவி அடை போலப் பரப்பி வைத்து உயர்ந்த சூட்டில்
4நிமிஷங்கள் மைக்ரோ வேவ் செய்து எடுக்கவும்.
எடுத்து ஆற விடவும். ஆறின பின் சிறு துண்டங்களாகச் செய்து
மிக்ஸியில் போட்டு வைப்பரில் 4 சுற்று சுற்றினால், பருப்பு
உதிர் உதிராக புட்டுப் போல கிடைக்கும்.
நறுக்கிய காய் எதுவோ அதை சிறிது ஜலம் சேர்த்து நனறாக
வேக வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து வெந்த காயைக் கொட்டி
வதக்கி உதிர்த்த பருப்புக் கலவையையும் சேர்த்துக் கிளறவும்.
நிதான தீயில் சற்று சிவக்க உதிர் உதிராகக் கிளறி இறக்கவும்
வதக்கும் போதே வேண்டிய உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்.
கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
மைக்ரோவேவ் இல்லாது செய்வதானால் நிதானமான தீயில்
தோசைக்கல்லில் அடைமாதிரிதட்டி மூடி வேகவைத்து,
திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, ஆற வைத்து,
துண்டித்து மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொண்டு செய்யலாம்.
பருப்புக் கலவையில் தனியா, ஜீரகம், மஸாலா, புளி , இஞ்சி,
வெங்காயம் என நமக்குப் பிடித்தவற்றையும் சேர்த்து
அரைத்தும் செய்யலாம். ஜலம் விடாது அரைக்கவும்.
காப்ஸிகம், வாழைப்பூ, ஆத்திக் கீரை, வெந்தயக் கீரை.
காராமணிக்காய் என நமக்கு வேண்டியவற்றுடன் ஜோடி சேர்த்து
தயாரிக்கலாம்.
அரைத்த பருப்புக் கலவையை ஸ்டீம் செய்து உதிர்த்தும்,
நேரடியாகவே தாளிதத்தில் போட்டு உதிராக வறுத்தும்
செய்யலாம்.