Archive for ஜூலை 24, 2016
தொட்டில்—9
வேலைக்குப் போக ஆரம்பிக்கு முன்னர் வீட்டில் இந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் பூணூலை முன்னிறுத்தியே ஆரம்பமாகியுள்ளது. உண்மையில் பூணூலில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. சொத்து. நம் ஏழ்மை.
இனி இவர்கள் இதைப்பற்றி பேச விடாமல் நாம் அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும். மஹா பெரியவாள் பிறந்த ஊர் அருகிலுள்ளது. அங்கும் ஒரு பெரியவர் ஏழைப் பையன்களுக்குப் பூணூல் போட்டு வைக்கிரார். அவ்விடம் போய் நாம் குடும்ப நிலவரத்தைச் சொல்லிக் கேட்போம்.
யாருமே வேண்டாம். அவர்களாகவே போட்டு விடட்டும். பிறகு இந்தப் பேச்சே வராது. முடிவெடுத்து விட்டனர்.
நிலம் நீச்சு மேற்பார்வை பார்க்க ஏதோ வேலையும் கிடைத்தது. வீட்டில் இரண்டு சமையலும். பெரிம்மாவை திட்டுதலுமாக எப்போதும் சச்சரவு நீடித்தது.
தியாகு ஒருநாள் பூணூல் போட்டு வைக்கும் பெரியவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தான். பெற்றவர்கள் வராமல் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தாலும் வயதையும் வீட்டு சூழ்நிலையையும் உத்தேசித்து நல்ல நாள் ஒன்று குறிப்பிட்டு சொல்லி விட்டார்.
விடியற்காலமே நிலத்தில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போன இரண்டு பிள்ளைகளும் புது வேஷ்டியும், பூணலும், மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வந்து சாயங்காலம் அம்மாவிற்கு நமஸ்காரம் செய்கிரார்கள். என்னடா இது தாய் விக்கித்துப் போய் ஒரு கணம் அப்படியே நிற்கிறாள். அடக்க முடியவில்லை அழுகையை. என்ன அம்மாடா நான். இன்னும் என்ன வெல்லாம் ஆகப்போகிறதோ?
அந்த மனுஷன் கத்துவாரே. நன்னா இருங்கடா. காலம் விடியணும். கதறல்தான்.
பெரியபெண் கத்துகிராள். வெளியில் போங்கடா. அப்பாகாரரும் வந்து விட்டார். அடிக்கப்போய் பசங்கள் தடுத்து நாங்கள் தப்பு ஒன்றும் செய்யவில்லை. இனி உங்கள் அடியெல்லாம் மறந்து விடுங்கள். ஏக ரகளை. பக்கத்து வீட்டுப் பாட்டி வருகிராள். விஷயம் தெரிகிறது.
நகருங்கள் எல்லாம். மஞ்சபொடி இருந்தா கொண்டுவா. ஆரத்தியைக் கரைத்து பிள்ளைகளை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டிவிட்டு வருகிறாள். போதும் உங்கள் சண்டை. ஊர் சிரிக்கும்.கௌரவமாக இருங்கள் என்று பல விதத்திலும் சொல்லி பெருத்த சண்டையை குறைக்கிராள். சாப்பாடு,அப்படியே கிடந்தது. ஸந்தோஷமான நாள் மூலைக்கொருவராக முடங்கினர்.ஊரெல்லாம் இதே பேச்சு.
நாட்கள் ,மாதங்களாக நகருகிறது. பிரும்மசர்ய ஆசிரமம் நல்ல கல்வியை கற்கும் நேரம். இந்தப் பிள்ளைகளும், அக்கம் பக்க நிலங்களையும் கவனித்து, அவர்களுக்கு இலாபகரமாக நெல்லை விற்றுக் கொடுத்துத்,தாங்களும் அதிலும் தியாகுவும் பொருளீட்ட ஆரம்பித்தனர்.
பெரியபெண்ணுக்கு வயது அதிகம். கல்யாணமில்லை. இன்னொரு பெண் ஏதோ இரண்டாந்தாரமாக கோவிலில் வைத்து கல்யாணம்.
எதற்கும் யாரையும் கூப்பிடுவதில்லை. வன்மம் அதிகமாகிக் கொண்டே போனது. தியாகு சின்னதாக வீடுகூட வாங்கி விட்டான்.
அக்கா குடும்பம். பெரிப்பா திடீரென உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. போக்குவரத்து பேச்சு வார்த்தை இல்லை.பிரயோஜனமுமில்லை. அவருக்கு தன்நிலத்தையே பார்க்கப் போகக் கூட முடியவில்லை. அவருடைய நிலத்தின் பக்கத்து நிலக்காரரும் அவருக்கு ஸொந்தமானவர். அவர்தான் நிலத்தை கவனித்தார்.
அவருக்கும் இந்த நிலத்தின்மீது ஒரு கண். அக்கா,தங்கை குடும்பமும் விரோதிகளாக இருக்கிரார்கள். நல்ல சான்ஸ்தான் என்று கணக்குப் போட ஆரம்பித்து விட்டது.
அவருடைய வழக்கமே நிலமுள்ளவர்களுக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் வலியபோய் பணம் கொடுப்பது. அவர்களுக்கு முடியாத ஸமயங்களில் கஷ்டம் கொடுத்து எழுதி வாங்குவது,மேன்மேலும் பாரம் சுமத்தி விற்கும் நிலைக்கு ஆளாக்கி தானே வாங்குவது என்பதில் கை தேர்ந்த நிபுணர். நிலத்தை ஆர்ஜிதம் செய்வதில் நிபுணர்.
பெரிப்பாவிற்கு தான் போய் விட்டால் இந்த அசட்டு மனைவி தெருவில் நிற்பாளே! யோசனைகளே ஆளை உலுக்கியது. என்ன செய்யலாம் யோசனையை பக்கத்து நிலக்காரரையே ஆத்மார்த்தமாக நம்பி கேட்க ஆரம்பித்தார். அவருடைய புத்தி இன்னும் தீட்சண்யமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
நாமே நம்முடைய பிள்ளையை ஸ்வீகாரம் கொடுத்து ஸொத்தை அடைந்து விடலாமே. மெள்ள மெள்ள யோசனை வலுத்தது.
நான் இருக்கும் போது உனக்கேன் கவலை. உனக்கு ஒன்றும் ஆகாது. உன் மனைவி எனக்குக் கூடப் பிறந்தவள்மாதிரி. நீ கவலையே படாதே. பங்காளிகளால் கஷ்டம் வரலாம். நான் அதற்கும் யோசனை வைத்துள்ளேன் கவலைப்படாதே.
வார்த்தைகள் தேனாக இனித்தது.
செயல்படுத்த வேண்டுமே. வீட்டிற்கு வந்ததும் அவர் மனைவியிடம் நான் ஒரு நல்ல காரியம் செய்யப் போகிறேன். யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. என்றாவது மறுப்பு சொல்ல அந்தக்கால மனைவிகளுக்கு உரிமை இருந்ததா என்ன?
யார் ஸொத்தை குறைந்த விலைக்கு வாங்கப் போகிராரோ? யார் சாபம் இடப் போகிரார்களோ? எதற்கு இந்தப் பேராசையோ? மனைவி ஸந்தோஷப்படவில்லை.
என்ன ஏது என்றும் கேட்கவில்லை.
நான் ஒருவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். என்ன ஏது என்று யாரும் கேட்கவில்லை.
கதையில் பெரியப்பாவாக வருபவரிடம் சென்று உனக்கு இகம்,பரம் இரண்டிற்கும் உங்கள் குடும்பத்திற்கு நான் இருக்கிறேன். என் பிள்ளைதான் உன் பிள்ளை. யாருக்கும் இப்போது சொல்ல வேண்டாம். கொஞ்சம் பொறு.
என்ன இவன் இப்படிச் சொல்லுகிறான். புரியவில்லையே. புரியும் பிறகுதான். ஓ.இவனுக்கும் ஒரு பிள்ளை இருக்கிரான். நமக்கு அதெல்லாம் ஸரிப்படுமா?
கண்ணான நிலம். பிள்ளையைக் கொடுத்தாலென்ன பெயரளவிற்குதானே. மனதில் பதிந்தாகி விட்டது.
தியாகு இன்னுமொரு வீடு வாங்கி இருக்கானாம். இதுவும் அவருக்கு ஒரு செய்தியாகத் தெரிவித்து அவர்களெல்லாம் எக்காலத்திலும் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் உங்களை. நானிருக்கப் பயமேன்? தொடரலாம்.