Archive for மார்ச் 14, 2012
காரடை. உப்பு
பச்சரிசி–1கப்
தேங்காய்த் துருவல்—அரைகப்
பச்சைமிளகாய்—2
இஞ்சி—சிறியதாக நறுக்கியது—2டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு
ஊறிய காராமணி—-2டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்—வாஸனைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு.
தாளித்துக் கொட்ட—எண்ணெய் சிறிதளவு
செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம்
ஊறவைத்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாக ஒரு துணியின் மீது
உலர்த்தவும்.
கலகலஎன்று உலர்ந்த அரிசியை நிதானதீயில் வாணலியை
வைத்து சற்று சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
ஆறியபின் வறுத்த அரிசியை ரவையாக மிக்ஸியில்
பொடிக்கவும்.
காராமணியை வெறும் வாணலியில் சற்று முன்னதாகவே
வறுத்து ஹாட்கேஸில் வென்னீர் விட்டு ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,உ.பருப்பு
தாளித்து இஞ்சி, பச்சைமிளகாயை வதக்கி ரவையின் அளவைப்
போல இரண்டு பங்கு தண்ணீரைச் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, தேங்காய்த் துருவல்,கறிவேப்பிலை சேர்த்து
தண்ணீரைக் கொதிக்க விடவும்.
ஊறின காராமணி, பெருங்காயத்தையும் சேர்க்கவும்.
கொதிக்கும் நீரில் ரவையச் சேர்த்துக் கிளறவும்.
தீயை மட்டுப் படுத்தவும்.
பந்துபோல வெந்து சேர்ந்து வரும்போது கிளறி மூடி இறக்கி
வைக்கவும்.
சற்று நன்றாக ஆறியபின் மாவைப் பிறித்து ஸமமாக உருட்டி
கனமான வடைகளின் உருவத்தில் , ஒரு பாலிதீன் கவர் மீது
எண்ணெயோ ஜலமோ தொட்டுத் தடவி
தட்டி எடுத்து, நீராவியில் 15 நிமிஷங்கள் வேகவைத்து
எடுக்கவும்.
இட்லி ஸ்டீம் செய்வது போலவேதான்.
உப்பு அடை தயார். தேங்காய் மணத்துடன் உப்பு காரத்துடன்
கூடிய மெத்தென்ற காரடை தயார்.
எது இஷ்டமோ அதை கூடச் சாப்பிடலாம்.
2010 மார்ச் 11 காரடை இனிப்பு எழுதினேன். இன்று
2012 மார்ச் 14 சென்னையினின்றும் காரடை உப்பு எழுதுகிறேன்.
பெண் செய்தாள். இன்று காரடையான் நோன்பு. இதை
எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். அடையைச்
சொல்கிறேன். அரிசி ஊறவைத்து உலர்த்தி வறுத்துச் செய்வதால்
அடை மிருதுவாக மெத்தென்று வருகிறது. உடன் வெண்ணெய்,
வேறு இன்று சாப்பிடுவதால் எல்லாமே ஸாஃப்ட்தான்.