Archive for மார்ச் 24, 2012
வேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.
புதியதான வேர்க்கடலையைப் ப்ரெஷ்ஷாக பார்த்ததும் கூட்டோடு
சேர்த்துப் பண்ணுவது ஞாபகத்திற்கு வந்தது. சாப்பிடறதோட எழுதறது
ஒரு வைடமின் B12 எனக்கு. மார்க்கெட்டிலிருந்து பீர்க்கங்காயும் நான்
தயார் என்றது. ஸரி. கூட்டு மட்டும் நான் பண்றேன். பர்மிஷன்
வாங்கினேன்.
ஒரு அரைகப்புக்கு மேலேயே வேர்க்கடலையை உறித்தேன்.
எங்கள் ஊர்பக்கம் மல்லாக் கொட்டை என்று சொல்லுவோம்.
மைசூர்லே கள்லேகாய். நார்த்லே இது பதாம்.
வேர்க்கடலை என்ற பெயர் அதிகம்.காமன் இல்லையா?
வேண்டியவைகள்.
பீர்க்கங்காய்—-2 திட்டமான ஸைஸ்
தேங்காய்த்துருவல்—-2 டேபிள்ஸ்பூன்
மிளகு—1டீஸ்பூன்
சீரகம்—அரை டீஸ்பூன்
மிளகாய்—-4 காரத்திற்கு தகுந்தாற்போல்
உளுத்தம் பருப்பு—-2 டீஸ்பூன்
அரிசி—1டீஸ்பூன்
உறித்த பச்சை வேர்க்கடலை—அறைகப்பிற்கு மேல்
தாளித்துக்கொட்ட—-வேண்டிய அளவு எண்ணெய்
கடுகு, உளுத்தம்பருப்பு, பெறுங்காயம் வகைக்கு சிறிதளவு
இருக்கவே இருக்கு கொத்தமல்லி கறிவேப்பிலை.
பருப்பு–வெந்த துவரம்பருப்போ, அல்லது பயத்தம்பருப்போ
4அல்லது 5 கரண்டிகள்.
ருசிக்கு—உப்பு
மஞ்சள் பொடி சிறிது
செய்முறை.
பீர்க்கங்காயை நன்றாக அலம்பி தோலைச் சீவி எடுக்கவும்.
தோலையும் உபயோகப் படுத்தி விடலாம். எதுக்குத் தெறியுமா?
அதையும் கூட ஒரு துவையலாக அறைக்கலாம்.
அதை அடுத்துப் பார்ப்போம்.
காயை திட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுவோம்.
மிளகாய், உ.பருப்பு,அரிசி, மிளகை துளி எண்ணெயில் நன்றாக
வறுத்துக் கொள்வோம்.
தேங்காய் சேர்த்து சீரகத்துடன் வறுத்தவற்றை மிக்ஸிலிட்டு
துளி ஜலம் சேர்த்து அறைத்து வைத்துக் கொள்ளுவோம்.
வழக்கமான பாத்திரம் இருக்குமே, அதில் சிறிது ஜலம்
வைத்து நறுக்கிய காய்,வேர்க்கடலை,உப்பு, மஞ்சள்ப்பொடி
சேர்த்து வேக வைப்போம் அதிக நேரமெடுக்காது.
காய் வெந்ததும், அரைத்த விழுதைக் கரைத்துக் கொட்டி
ஒரு கொதிவிட்டு பருப்பையும் சேர்த்துக் கொதிக்கவைத்து
இறக்குவோம்.
அரிசி சேர்ப்பது நீர்க்கும் காய்களை ஓரளவு சேர்ந்தாற்போல
இருப்பதற்குதான்.
இஷ்ட்டப் பட்டால் துளி நெய்யில் கடுகு, பெருங்காயத்தைத்
தாளித்துக் கொட்டினால் கூட்டு ரெடி. எண்ணெயிலும் தாளிக்கலாம்.
கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதற்கு ஜோடியாக புளி வைத்து அறைத்த துவையலையும்
சொல்லி விடுகிறேன். கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள்.
துவையலுக்காக வேண்டியவை.
பெறிய சைஸ் வெங்காயம்—1
இஞ்சி—1 அங்குல நீளம்
இஷ்டப்பட்டால் 4அல்லது5 பூண்டு இதழ்கள்
மிளகாய்—-3அல்லது 4 எதுவானாலும் ஸரி
வறுப்பதற்கு—எண்ணெய்
உளுத்தம் பருப்பு—-ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, பெருங்காயம் துளி
புளி—ஒரு நெல்லிக்காயளவு
ருசிக்கு –உப்பு
கொத்தமல்லி, கறிவேப்பிலை எதுவானாலும் கூட
வைக்கலாம். கலர் பச்சையாகவும் வாஸனையாகவும் இருக்கும்.
செய்யலாமா?
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு
மிளகாய் பருப்பை வறுத்துக்கொண்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி
வதக்கிக்கொண்டு நருக்கிய பீர்க்கந் தோலையும் சேர்த்து நன்றாக
வதக்கவும்
புளி, உப்பு சேர்த்து வதக்கியதைத் துவையலாக மிக்ஸியில்
அறைத்தெடுக்கவும்.
பொறித்த கூட்டும், புளிப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்.
கொஞ்சம் அப்பளாத்தை சுட்டுவிட்டு பருப்பு ஜலம்விட்ட நாட்டு
தக்காளி ரஸமும் வைத்துவிட்டால் ஒரு ஸிம்பிளான ருசியான
சமையல்தான் பிடித்தவர்களுக்கு. யாருக்கு பிடிக்கும் பார்க்கலாம்
.