Archive for செப்ரெம்பர் 21, 2016
தட்டை பீன்ஸ் கறி.
நான் முன்பு ஜெநிவாவில் இருக்கும்போது இந்தக்காயை கட்டாயம் பார்த்தால் வாங்காது விடமாட்டேன். ஃப்ரெஞ்சுப்பெயர் HARICOTS COCO. நான் என்னவோ பெரிய அவரைக்காய் என்பேன். ஆங்கிலத்தில் FLATE BEANS என்பார்கள் போல இருக்கிறது.
ஒரு கப்பீன்ஸ் கறிசாப்பிட்டால் 110 கலோரிகள் அதில் இருக்கிறது. நார்ச் சத்து அதிகம் இருக்கும் காய். நம் ஊரில் எத்தனையோவித அவரைக்காய்கள்,கலர்க் கலரில் காய்த்தும் ,வாங்கியும் சாப்பிட்டிருக்கிறோம். அவைகளின் ருசி அலாதி. இக்காயில் ப்ரோடின்,கார்போஹைட்ரேட் முதலானது அதிகம் இருக்கிறது.
இதுவும் அவரைக்காய் வகைதான். காயின் மேல்ப்பாகம் சற்று தடிமனாக இருக்கிறது. ஸரி இதையும் சமைத்து ஒரு பதிவு போடுவோமென்று தோன்றியது.
நான் செய்தது என்னவோ ஸாதாரண கறிதான்.
செய்முறை.
காய் ஒரு கால்கிலோ அளவு.
இஷ்டப்பட்ட அளவு தேங்காய்த் துருவல். இஞ்சி நசுக்கியது சிறிதளவு.
கறிப்பொடி—இரண்டு டீஸ்பூன். வேண்டிய அளவு உப்பு. மஞ்சட்பொடி அரை டீஸ்பூன் எண்ணெய்—ஒரு டேபிள்ஸ்பூன். கடுகு,உளுத்தம் பருப்பு தாளிக்க சிறிது.
செய்முறை. காயை நன்றாகத் தண்ணீர் விட்டு அலம்பி வடிக்கட்டவும்.
பின்னர் காம்பு நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காயின்மேல் நசுக்கிய இஞ்சியைப்போட்டு ,ஒரு அரைஸ்பூன் எண்ணெய் விட்டுப் பிசறி மைக்ரோவேவில் உயர்ந்த மின் அழுத்தத்தில் 10 நிமிஷங்கள் வேக வைத்து எடுக்கவும். அல்லது குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விஸில் வருமளவிற்கு விட்டு வேக வைத்ததை வடிக்கட்டவும்..
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு உளுத்தம் பருப்பைச்சேர்த்து சிவந்ததும் வெந்த காயைக் கொட்டி,உப்பு,மஞ்சள் சேர்த்து வதக்கவும். கடைசியில் கறிப்பொடியைத் தூவி வதக்கி தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி இறக்கவும். பொடிபோட்ட கறியாதலால் நான் தேங்காய் சேர்க்கவில்லை.
கூட்டு,ஸாம்பார்,அவியல்,வெந்தயக்குழம்பு என எதிலும் சேர்க்கலாம். அவரைக்காய் கறிமாதிரிதானே என்கிறீர்களா? ஜெனிவா பதிப்பில்லையா? அதுதான் விசேஷம்.பச்சைக் கொத்தமல்லியையும் தூவிக்கொண்டு இருக்கிறது. என் மும்பை மருமகள் அப்படியே எண்ணெயில் நேராக வதக்கித்தான் செய்வாள். வேக வைக்க மாட்டாள். இது சற்று தோல் பருமனாக இருப்பதால் வேக வைக்கிறேன். இரண்டு விதங்களும் நன்றாகவே இருக்கும்.
வெங்காயம்,பூண்டு வேண்டுமென்பவர்கள் தாளிதத்திலேயே அதைச் சேர்க்கவும்.