Archive for ஒக்ரோபர் 30, 2009
வேர்க்கடலைச் சட்னி
வேண்டியவை—–ஒருகப் வேர்க்கடலை, வெறும் வாணலியில் வறுத்துத் தோல் நீக்கிக கொள்ளவும். மற்றும்
தனியா விதை ஒரு டீஸ்பூன்,—-ஒரு சிறிய துண்டு இஞ்சி
வற்றல் மிளகாய் 3,—தேங்காய்த் துருவல் அரைகப்,
புளி, சின்ன எலுமிச்சை அளவு,–ருசிக்கு உப்பு
புதினா அல்லது கறிவேப்பிலை இலைகள் அரைகப்.
எண்ணெய் நான்கு டீஸ்பூன், தாளிக்க தலா கடுகு, உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன்.
புளிக்கு பதில் வேண்டிய அளவு தக்காளிப்பழமும் வதக்கி உபயோகிக்கலாம்.
செய்முறை—-புளியை ஊற வைத்து கெட்டியாகசாறை எடுத்துக் கொள்ளவும்.
தனியா, மிளகாய்,இஞ்சியை எண்ணெயில் வறுத்துக் கொண்டு
புதினாவையும் சேர்த்து இறக்கவும். வறுத்து தோல் நீக்கிய
வேர்க்கடலையுடன் புளி நீர், தேங்காய், வறுத்த சாமான்கள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்தெடுத்து எண்ணெயில் தாளித்துக் கொட்டவும். அரை டீஸ்பூன் வெல்லமும் சேர்க்கலாம்.
வேண்டிய சுவைக்கேற்ப வெங்காயம், பூண்டு, என பிடித்த ருசிக்கேற்றவாறு சாமான்களை மாற்றிப் போட்டு ஜமாய்க்கலாம். புளிப்பு காரமும், எப்படி வேண்டுமோ அப்படி மாற்றலாம்.
வெண்டைக் காய் பச்சடி
வேண்டியவை—ஒருகப் தயிர். வெண்டைக்காய் இளசாக 8
ஒருஸ்பூன் தேங்காய்த் துருவல் , மிளகாய் 1, இஞ்சி சிறிது
தாளிக்க -கடுகு கால்ஸபூன், பெருங்காயம் துளி, இரண்டுடீஸ்பூன் எண்ணெய், ருசிக்கு உப்பு
அறிந்த பச்சைக் கொத்தமல்லி. தக்காளி சிறிது.
செய்முறை—–வெண்டைக்காய்களை அலம்பித் துடைத்து மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மிளகாய், தேங்காயை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு பெருங்காயத்தை தாளித்து வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டு நிதானமான தீயில் வதக்கவும்.
சுருள வதக்கிய காயில் உப்பு சேர்த்து ஆற வைக்கவும்.
தயிரில் யாவற்றையும் சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி தக்காளியால் அலங்கரித்துப் பறிமாரவும்.