Archive for மார்ச் 11, 2010
காரடை—வெல்லம்.
வேண்டியவைகள்
பச்சரிசி——-ஒருகப்–
பொடித்த வெல்லம்——முக்கால் கப்
ஏலக்காய்—3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும்.
காராமணி——2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது—–3 டேபிள் ஸ்பூன்
நெய்——–3டீஸ்பூன்
செய்முறை
அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல்
உலர்த்தலாகக் காய வைக்கவும்.
கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று
சிவப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின்
அரிசியை மிக்ஸியில் இட்டு மெல்லிய ரவையாகப்
பொடித்துக் கொள்ளவும்.
காரா மணியை முன்னதாகவே வெறும் வாணலியில்
வறுத்து வென்னீர்விட்டு ஹாட்கேஸில் ஊறவைத்து
வைக்கவும்.
தேங்காய்த் துண்டுகளை நெய்யில் லேசாக வறுத்துக்
கொள்ளவும்.
வெல்லத்தை அரைகப் ஜலம் விட்டுக் கரைத்து சூடாக்கி
இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் மொத்தமாக வெல்லக்
கரைசலுடன் சேர்த்து ஒன்றறை கப் ஜலம், அளந்து வைத்து,
ஒரு துளி உப்பு, தேங்காய்த் துண் டுகள், ஊறிய வடிக்கட்டிய
காராமணி , ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தீயை நிதானமாக்கி கொதிக்கும் ஜலத்தில் பொடித்த ரவையைக்
கொட்டிக் கிளறவும்.
மாவு வெந்துத் தண்ணீரை இழுத்துக் கொண்டு கெட்டியாக
சேர்ந்து வரும் போது இறக்கி வைத்து சற்று நேரம் மூடி
வைக்கவும்.
தட்டில் மாவை ஆற வைத்து, அளவாக மாவைப் பிரித்துக் கொண்டு
பெரிய வடைபோல பொத்தலிட்டு அடைகளைத் தயாரிக்கவும்.
சிறிது ஜலமோ, எண்ணெய்யோ கையில் தொட்டுக் கொண்டால்
கையில் ஒட்டாது.
இட்டிலி ஸ்டாண்டில் எண்ணெய் தடவி பரவலாக வைத்து
இட்டிலி செய்வது போல நீராவியில் வேக வைக்கவும்.
குக்கரில் 12 நிமிஷத்திற்கு, அதிகமாகவே வைத்து எடுக்கவும்.
வெண்ணெயுடன் நிவேதனம் செய்ய காரடை தயார்.
மாவு கிளறும்போது கொதிக்கும் ஜலத்தில் சிறிது,
முன்னதாகவே தனியாக எடுத்து வைத்து விட்டால்
தண்ணீர் அதிகமாவதைத் தடுக்கலாம். புது அரிசியாக
இருந்தால் தண்ணீர் அதிகம் இழுக்காது. பழய அரிசியாக
இருந்தால் சாதத்திற்கு வைக்குமளவிற்கு ஜலம்
தேவையாக இருக்கும்.
பாஸுமதி அரிசிக்கு இந்தக் கணக்கு ஸரியாக வரும்.
பொன்னி போன்ற தமிழ்நாட்டு பழய அரிசிக்கு கூடுதலாக
தண்ணீர் தேவைப் படுகிறது.
வெந்த அடையுடன் வெண்ணெய் சேர்த்து வைத்து
நிவேதனம் செய்து சரடு கழுத்தில் கட்டிக்கொண்டு
அதையே பலகாரமாக உட்கொள்வது வழக்கம்.
இந்த நோன்பிற்கே காரடையான் நோன்பு என்று
சொல்வது வழக்கம். ஸத்யவான் ஸாவித்திரி
விரதவிசேஷ இனிப்பு இது.