Archive for மார்ச் 20, 2010
பத்திய தோசை.
வேண்டியவைகள்
புழுங்கலரிசி——ஒன்றறை கப்
வெந்தயம்—–2 டீஸ்பூன்
துவரம்பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு–அரைகப்
தாளிக்க—-கடுகு, மிளகு அரை டீஸ்பூன்
சீரகம், பெருங்காயம்—-சிறிதளவு.
ருசிக்கு உப்பு
தோசை செய்ய நல்லெண்ணெய்
செய்முறை————–அரிசி ,பருப்புகள், வெந்தயத்தை நன்றாகக்
களைந்து தண்ணீரில் ஊற வைத்து கிரைண்டரில் போட்டு குறைந்த
அளவு ஜலம் சேர்த்து நன்றாக அறைத்து உப்பு சேர்த்து எடுக்கவும்.
மாலையில் அரைத்தால் காலையில் செய்ய சரியாக இருக்கும்.
புளித்து விடும் எனறு தோன்றினால் பாதி மாவை பிரிஜ்ஜில்
வைத்தெடுத்து கலந்து உபயோகிக்கலாம்.
கடுகைத் தாளித்து, மிளகு சீரகத்தைத் தட்டிப் போட்டு சற்று
கெட்டியாகவே மாவை உபயோகிக்கலாம்.
குழிவான தோசைக் கல்லிலோ, நான் ஸ்டிக் பேனிலோ
எண்ணெய் தடவி தோசையைக் கனமாகப் பரப்பி சுற்றிலும்
எண்ணெய் விட்டு மிதமான தீயில் திட்டமான மூடி ஒன்றினால்
மூடி வேக விடவும்.
2 நிமிஷ இடை வெளியில் மூடியைத் திறக்கவும். தோசை அடி
சிவந்து வெந்திருக்கும். சற்று நிதானித்து தோசையைத் திருப்பிப்
போட்டு துளி எண்ணெய் விட்டு முருகலான பதத்தில் எடுக்கவும்.
மிளகாய்ப்பொடி, சட்னிகளுடன் ருசியாக இருக்கும்.
எண்ணெய் குறைவாக விட்டால் பத்திய தோசைதான்.
மெல்லியதாகவும் வார்க்கலாம்.
இனிப்பு கார பஜ்ஜி.
புளிப்பு கார பஜ்ஜி என்று கூடச் சொல்லலாம். செய்து ருசித்தால்தான்
அபிப்பிராயம் சொல்ல முடியும் இல்லையா.
வேண்டியவைகள்—–மைதா, கடலைமாவு, அரிசி மாவு எல்லாமாகக்
கலந்து 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை—-2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் —-1 பொடித்துக் கொள்ளவும்.
பெரு்ஞ் சீரகம்—அரை டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—முக்கால் டீஸ்பூன்
ருசிக்குச் சற்று குறைவாகவே உப்பு
மாவில் கலக்க—2 டீஸ்பூன் நெய்
பொரிப்பதற்கு எண்ணெய்
தோய்த்துப் போட உபயோகிக்கத் தக்கவைகள்
பழுத்தும், பழுக்காததுமான தக்காளிக் காய், ஆப்பிள், பீட்ரூட், கேரட்
பறங்கிக் காய், வெங்காயம், வெள்ளிக் கிழங்கு.
செய்முறை——மாவுடன் உப்பு, காரம், இனிப்பு, நெய்,ஏலம், சீரகம்,
எல்லாவற்றையும் கலந்து திட்டமாக ஜலம் சேர்த்து இட்டிலி
மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிடித்தமானவற்றை மெல்லிய வில்லைகளாக நறுக்கி மாவில்
தோய்த்து , வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பதமான
சூட்டில் பொரித்து எடுக்கவும். வயதானவர்கள், சின்னவர்கள்
விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு ருசி மாறுதலுக்கு உகந்தது.
இனிப்பு கூட்டிக் குறைக்கலாம்.ருசித்துப் பாருங்கள்.
ரவை உப்புமா.
வேண்டியவைகள்
நல்ல பெரிய ரவை—–1 கப் சூடாக வறுத்துக் கொள்ளவும்.
காய் கறிகள் போட்டுச் செய்தால் ருசி கூடும்.
கேரட்—–1 நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம்—பெறியதான ஒன்றை நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைப் பட்டாணி—கால்கப்
கோஸ்—-நறுக்கியது முக்கால் கப்
கேப்ஸிகத் துண்டுகள்—கால்கப்
பச்சை மிளகாய்—–2 நீளவாட்டில் நறுக்கவும்
இஞ்சித் துண்டுகள்—2 டீஸ்பூன்
கறிவேப்பிலை—சிறிது
தாளிக்க—எண்ணெய்—2 டேபிள் ஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
முந்திரி 5 அல்லது 6
எலுமிச்சம் பழம் ஒரு மூடி
ருசிக்கு் உப்பு
செய்முறை——வாணலியிலோ, நான் ஸ்டிக் பானிலோ
எண்ணெயைக் காய வைத்து, கடுகு, பருப்பு வகைகளைத்
தாளித்து, இஞ்சி,மிளகாய்,கறிவேப்பிலை வெங்காயத்தைச் சேர்த்து
வதக்கி, நறுக்கி அலம்பியுள்ள காய்களையும் சேர்த்து
வதக்கவும். 2 கப் ஜலம் சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்பும், நெய்யும் சேர்க்கவும்.
தீயைக் குறைத்து கொதிக்கும் ஜலத்தில் ரவையைச்
சீராகக் கொட்டிக் கிளறவும். ரவை சேர்ந்தார்ப்போல
வெந்து வரும்போது மறுபடியும்ஒரு முறைக் கிளறி
தட்டினால் மூடி 2 நிமிஷம் வேக வைத்து இறக்கவும்.
எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து கலந்து பறிமாரவும்.
தாளிப்பில் சீரகம், பெருங்காயம் சேர்க்கலாம்.
காய்கள் போடாது வெங்காயம் சேர்த்தும், எலுமிச்சைக்குப்
பதில் தக்காளி சேர்த்தும் செய்யலாம்.
ரவையை மைக்ரோவேவ்விலும் வைத்து வறுத்துக்
கொள்ளலாம். சீக்கிரம் தயாரிக்க முடியும் டிபனிது.