Archive for மார்ச் 9, 2010
பாகற்காய் பிட்லை.
பாகற்காயில் எது செயவதானாலும் காயை அலம்பி இரண்டாக
நறுக்கி விதைகளை நீக்கி விட்டு மெல்லிய துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும் பின்பு சிறிது மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து பிசறி
ஒரு பாத்திரத்தில் அமுக்கி வைத்து ஊறவைக்கவும்.
பிட்லைக்கு வேண்டிய சாமான்கள்.
பாகற்காய்—–நான்கு
வறுத்தரைக்க சாமான்
மிளகாய் வற்றல்—-3
மிளகு—–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
தனியா–2 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
வேக வைக்க—–துவரம் பருப்பு 1 கப்
சேர்த்து அரைக்க—–துருவிய தேங்காய் 1 மூடி
கரைத்து விட—-புளி எலுமிச்சை அளவிற்கு
நலலெண்ணெய்—–3 டேபிள் ஸ்பூன்
வாஸனைக்கு—–கொத்தமல்லி, கறிவேப்பிலை
வெல்லப்பொடி—–1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு
மஞ்சள் பொடி —சிறிது ,—–தாளிக்கக் கடுகு
தக்காளிப் பழம்—-ருசிக்கு ஏற்ப
செய்முறை—-பருப்பைக் களைந்து திட்டமாகத் தண்ணீர் சேர்த்து
குக்க்கரில் வேக வைத்துக் கொள்ளவும். சிறிது கடலைப் பருப்பும்
சேர்த்து வேக வைக்கலாம்.
வறுக்கக் கொடுத்திருப்பவைகளை சிறிது எண்ணெயில் சிவக்க
வறுத்து முக்கால் பங்கு தேங்காயையும் உடன் சேர்த்துப்
பிரட்டி எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து
எடுக்கவும்.
புளியை 2அல்லது 3 கப் தண்ணீரில் நன்றாகக் கரைத்து
சாறு எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் 2—3-,ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய வைத்து,
பாகற்காயை சற்றுக் கசக்கி நீரைப் பிழிந்து விட்டுச் சேர்த்து
வதக்கவும்.
மைக்ரோவேவ் உபயோகிப்பவர்களாக இருந்தால் காயை
எண்ணெய் விட்டுப் பிசறி 4–5, நிமிஷம் வைத்து எடுத்தால்
அருமையாக வெந்து விடும்.
வதக்கிய காயில் புளி ஜலம், உப்பு வெல்லம், மஞ்சள்
சேர்த்து கொதிக்க விடவும்.
காய் நன்றாக வெந்து புளி வாஸனை போனபின்
அறைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்துக்
கிளறவும்.
ஒரு கொதி வந்ததும், வெந்த பருப்பையுமசேர்த்துக்
கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி கறிவேப்பிலை
போடவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து மிகுதி தேங்காயைசிவக்க
வறுத்துச் சேர்க்கவும்.
தக்காளியை வதக்கியோ, அரைக்கும் போது சேர்த்தோ
உபயோகிக்கலாம்.
கொண்டைக் கடலை, காய்ந்த பட்டாணி இவைகளை
முதல் நாளே ஊற வைத்து பருப்பு வேகும்போது சேர்த்துக்
கலந்து உபயோகிக்கலாம்.
காரத்திற்கும், வாஸனைக்கும் பச்சை மிளகாய் கொதிக்கும்
போது ஒன்றிரண்டு சேர்க்கலாம்.