Archive for மார்ச், 2010
பாகற்காய் வறுவல்.
வேண்டியவைகள்-
-4 அல்லது5 பாகற்காய்களை நறுக்கி விதைகளை நீக்கி
மெல்லியத் துண்டங்களாகச் செய்துகொள்ளவும்.
.அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துப் பிசறி ஊற விடவும்.
மற்றும்
மஞ்சள் பொடி– அரை டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி—1 டீஸ்பூன்
சர்க்கரை—-1 டீஸ்பூன்
கடலைமாவு—கால்கப்
அரிசி மாவு —1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி—-1 டேபிள் ஸ்பூன்
உப்பு—ருசிக்கு
பெருங்காயப் பொடி—-அரை டீஸ்பூன்
மாவில் கலக்க—1 ஸ்பூன் நெய்
வறுவல் வறுப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்
செய்முறை
பாகற்காயை கசக்கினாற் போல ஒட்டப் பிழிந்து எடுக்கவும்.
சிறிது உப்பு, காரம், நெய் புளிப்பு,இனிப்பு யாவற்றையும்,
கலந்து மேலாக மாவுகளைத் தூவி உதிர் உதிராகப்
பிசறவும்.
எண்ணெயைக் காயவைத்து உதிர்த்த மாதிரி தளர்களைப்
போட்டு முறுகலாக வறுத்தெடுத்து உபயோகிக்கவும்.
அரிசி மாவிற்குப் பதில் ஓட்ஸ் கலந்தும் உபயோகிக்கலாம்.
காற்று புகாதபடி டப்பாக்களில் வைத்து 4 அல்லது5 நாட்கள்
கூட வைத்து உபயோகிக்கலாம். பிசறலில் தண்ணீர் சேர்க்கக்
கூடாது.
மாங்காய்த் தொக்கு.
வேண்டியவைகள்
.சற்று புளிப்பான மாங்காயைத் தோல் சீவித் துருவிய
மாங்காய்த் துருவல்—-4கப்
மிளகாய்ப் பொடி—-5 டீஸ்பூன்
வறுத்தரைத்த வெந்தயப் பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்—-7 டேபிள் ஸ்பூன்-
-வற்றல் மிளகாய் 2 —-கடுகு 1 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
நான்ஸ்டிக் பேன் அல்லது அலுமினிய வாணலியில்எண்ணெயைக்
காய வைத்து கடுகு தாளித்து, மிளகாயை சிவக்க வறுத்துக்
கொண்டு மாங்காய்த் துருவலைச் சேர்த்து நிதான தீயில் வதக்கவும்.
உப்பு மஞ்சள் பொடி சேர்த்து சுருள வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து மாங்காய்சுருண்டு வரும் போது காரப்பொடி
வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கிளறி உடனே
இறக்கவும். ஆறியவுடன் பாட்டிலில் போட்டு வைத்து உபயோகிக்கவும்.
இதுவும் எல்லாவற்றிற்கும் உறு துணையாக இருக்கும்.
அதிகம் போலத் தோன்றினால் பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
மாங்காயின் புளிப்பிற்கு தக்கவாறு உப்பு காரம் கூட்டிக் குறைக்கவும்.
மிளகாய்த் தொக்கு.
வேண்டியவைகள்
பச்சை மிளகாய்—–100 கிராம்
புளி—-ஒரு எலுமிச்சையளவு
எண்ணெய்—–3டேபிள் ஸ்பூன்
கடுகு—–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—முக்கால் டீஸ்பூன்
வெந்தயம்-1 டீஸ்பூன்
உப்பு—-தேவையான அளவு
வெல்லப் பொடி–1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
செய்முறை—–மிளகாயை அலம்பி காம்பு நீக்கிதுடைத்து
வைத்துக் கொள்ளவும்.
புளியைக் கொட்டை கோது இல்லாமல் உலர்த்திஎடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பச்சை மிளகாயைக்
கீறிப் போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.
மூடியால் மூடித் திரந்து பதமாக வதக்கவும்.
ஆறிய பின் புளி,உப்பு,வெல்லம் சேர்த்து துளி கூட
தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அறைத்து எடுக்கவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தைச்
சிவக்க வறுத்துப் போட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்துக்
கலந்து காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து,
உபயோகிக்கவும் .சாப்பாடு டிபன் வகைகளுடன் உற்ற
ஜோடியாக இருக்கும்.
பத்திய தோசை.
வேண்டியவைகள்
புழுங்கலரிசி——ஒன்றறை கப்
வெந்தயம்—–2 டீஸ்பூன்
துவரம்பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு–அரைகப்
தாளிக்க—-கடுகு, மிளகு அரை டீஸ்பூன்
சீரகம், பெருங்காயம்—-சிறிதளவு.
ருசிக்கு உப்பு
தோசை செய்ய நல்லெண்ணெய்
செய்முறை————–அரிசி ,பருப்புகள், வெந்தயத்தை நன்றாகக்
களைந்து தண்ணீரில் ஊற வைத்து கிரைண்டரில் போட்டு குறைந்த
அளவு ஜலம் சேர்த்து நன்றாக அறைத்து உப்பு சேர்த்து எடுக்கவும்.
மாலையில் அரைத்தால் காலையில் செய்ய சரியாக இருக்கும்.
புளித்து விடும் எனறு தோன்றினால் பாதி மாவை பிரிஜ்ஜில்
வைத்தெடுத்து கலந்து உபயோகிக்கலாம்.
கடுகைத் தாளித்து, மிளகு சீரகத்தைத் தட்டிப் போட்டு சற்று
கெட்டியாகவே மாவை உபயோகிக்கலாம்.
குழிவான தோசைக் கல்லிலோ, நான் ஸ்டிக் பேனிலோ
எண்ணெய் தடவி தோசையைக் கனமாகப் பரப்பி சுற்றிலும்
எண்ணெய் விட்டு மிதமான தீயில் திட்டமான மூடி ஒன்றினால்
மூடி வேக விடவும்.
2 நிமிஷ இடை வெளியில் மூடியைத் திறக்கவும். தோசை அடி
சிவந்து வெந்திருக்கும். சற்று நிதானித்து தோசையைத் திருப்பிப்
போட்டு துளி எண்ணெய் விட்டு முருகலான பதத்தில் எடுக்கவும்.
மிளகாய்ப்பொடி, சட்னிகளுடன் ருசியாக இருக்கும்.
எண்ணெய் குறைவாக விட்டால் பத்திய தோசைதான்.
மெல்லியதாகவும் வார்க்கலாம்.
இனிப்பு கார பஜ்ஜி.
புளிப்பு கார பஜ்ஜி என்று கூடச் சொல்லலாம். செய்து ருசித்தால்தான்
அபிப்பிராயம் சொல்ல முடியும் இல்லையா.
வேண்டியவைகள்—–மைதா, கடலைமாவு, அரிசி மாவு எல்லாமாகக்
கலந்து 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை—-2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் —-1 பொடித்துக் கொள்ளவும்.
பெரு்ஞ் சீரகம்—அரை டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—முக்கால் டீஸ்பூன்
ருசிக்குச் சற்று குறைவாகவே உப்பு
மாவில் கலக்க—2 டீஸ்பூன் நெய்
பொரிப்பதற்கு எண்ணெய்
தோய்த்துப் போட உபயோகிக்கத் தக்கவைகள்
பழுத்தும், பழுக்காததுமான தக்காளிக் காய், ஆப்பிள், பீட்ரூட், கேரட்
பறங்கிக் காய், வெங்காயம், வெள்ளிக் கிழங்கு.
செய்முறை——மாவுடன் உப்பு, காரம், இனிப்பு, நெய்,ஏலம், சீரகம்,
எல்லாவற்றையும் கலந்து திட்டமாக ஜலம் சேர்த்து இட்டிலி
மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிடித்தமானவற்றை மெல்லிய வில்லைகளாக நறுக்கி மாவில்
தோய்த்து , வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பதமான
சூட்டில் பொரித்து எடுக்கவும். வயதானவர்கள், சின்னவர்கள்
விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு ருசி மாறுதலுக்கு உகந்தது.
இனிப்பு கூட்டிக் குறைக்கலாம்.ருசித்துப் பாருங்கள்.
ரவை உப்புமா.
வேண்டியவைகள்
நல்ல பெரிய ரவை—–1 கப் சூடாக வறுத்துக் கொள்ளவும்.
காய் கறிகள் போட்டுச் செய்தால் ருசி கூடும்.
கேரட்—–1 நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம்—பெறியதான ஒன்றை நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைப் பட்டாணி—கால்கப்
கோஸ்—-நறுக்கியது முக்கால் கப்
கேப்ஸிகத் துண்டுகள்—கால்கப்
பச்சை மிளகாய்—–2 நீளவாட்டில் நறுக்கவும்
இஞ்சித் துண்டுகள்—2 டீஸ்பூன்
கறிவேப்பிலை—சிறிது
தாளிக்க—எண்ணெய்—2 டேபிள் ஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
முந்திரி 5 அல்லது 6
எலுமிச்சம் பழம் ஒரு மூடி
ருசிக்கு் உப்பு
செய்முறை——வாணலியிலோ, நான் ஸ்டிக் பானிலோ
எண்ணெயைக் காய வைத்து, கடுகு, பருப்பு வகைகளைத்
தாளித்து, இஞ்சி,மிளகாய்,கறிவேப்பிலை வெங்காயத்தைச் சேர்த்து
வதக்கி, நறுக்கி அலம்பியுள்ள காய்களையும் சேர்த்து
வதக்கவும். 2 கப் ஜலம் சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்பும், நெய்யும் சேர்க்கவும்.
தீயைக் குறைத்து கொதிக்கும் ஜலத்தில் ரவையைச்
சீராகக் கொட்டிக் கிளறவும். ரவை சேர்ந்தார்ப்போல
வெந்து வரும்போது மறுபடியும்ஒரு முறைக் கிளறி
தட்டினால் மூடி 2 நிமிஷம் வேக வைத்து இறக்கவும்.
எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து கலந்து பறிமாரவும்.
தாளிப்பில் சீரகம், பெருங்காயம் சேர்க்கலாம்.
காய்கள் போடாது வெங்காயம் சேர்த்தும், எலுமிச்சைக்குப்
பதில் தக்காளி சேர்த்தும் செய்யலாம்.
ரவையை மைக்ரோவேவ்விலும் வைத்து வறுத்துக்
கொள்ளலாம். சீக்கிரம் தயாரிக்க முடியும் டிபனிது.
வெண் பொங்கல்.
வேண்டியவைகள்
பச்சரிசி——1 கப்
பயத்தம் பருப்பு—அரைகப். பருப்பை சற்று சிவக்க வறுத்து
அரிசியைச் சேர்த்து ஒரு பிரட்டல் பிரட்டி இறக்கவும்.
நெய்—-கால்கப்
மிளகு–ஒன்றரை டீஸ்பூன்
ஜீரகம்—-1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—-சிறிது
தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிய இஞ்சி–1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு—10
வாஸனைக்கு—கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி
கறி வேப்பிலை—-சிறிதளவு
மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
சாதம் சமைக்க அரிசிக்கு எந்த அளவில் ஜலம்வைப்போமோ
அந்தக் கணக்கில் ஜலத்தை எடுத்துக் கொண்டு வைக்கலாம்.
சில வகைகளுக்கு 3 பங்கு ஜலம். சில வகைகளுக்கு 2 பங்கு
அதனால் இப்படி எழுதுகிறேன்
வறுத்த அரிசி பருப்பைக் களைந்து 3 கப்பிற்கு அதிகமாகவே
தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடி கலந்து குக்கரில் ஸப்ரேட்டரில்
வைத்து ,ஒரு விஸில் , அதிகமாகவே வரும்படிவைத்துக் குழைய
வேக விடவும்.
முந்திரியை வறுத்து ஒடித்துக் கொள்ளவும்.
நிதானமான தீயில் நெய்யைக் காய்ச்சி மிளகு ஜீரகத்தைப்
பொரித்து பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து
வேண்டிய உப்பு போட்டு வெந்த கலவையில் கொட்டிக்
கிளறவும். முந்திரி சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து
சுடச்சுட பறிமாரவும். பாஸுமதி அரிசியானால் 2 பங்கு
ஜலம்.
பொன்னி வகை பழய அரிசியானால் 3 பங்கு ஜலம். தவிர
பருப்பிற்கும் சேர்த்து நெகிழ தயாரிப்பதற்கு அதிகமாகவே
ஜலம் வைக்கவும்.
சட்னி, கொத்ஸு வகைகள் சேர்த்துச் சாப்பிட நன்றாக
இருக்கும்.
ராகி தோசை.
வேண்டியவை
அரைத்த கேழ்வரகு மாவு–2 கப்
உளுத்தம் பருப்பு——கால்கப்
வெந்தயம்—ஒரு டீஸ்பூன்
ருசிக்கு —உப்பு
தோசை செய்ய வேண்டிய எண்ணெய்
வேக வைத்து தோல் உறித்த—2 உருளைக் கிழங்கு
செய்முறை—-மாவை உப்பு சேர்த்துத் சற்றுத் தளரத் தண்ணீர் விட்டுப் பிசையவும்.
வெந்தயத்தையும், பருப்பையும் தண்ணீர் விட்டுக் களைந்து
3 மணிநேரம் ஊற வைத்து , மிக்ஸியில் அறைத்து, மாவுடன்
சேர்த்துக் கலக்கி வைக்கவும்.
5, 6 மணி நேரம் கழித்து வெந்த உருளைக் கிழங்கை
நன்றாக மசித்து மாவுடன் கலக்கி தோசைகளாக வார்த்துச்
சாப்பிடலாம். பிடித்தமான சட்னியோ கூட்டுகளோ இசைவாக
இருக்கும். அரிசி இல்லாத டிபன்.
வேண்டுமாயின் ஒரு கரண்டிமோர் மாவுடன் கலந்து
கொள்ளவும்.
புளிக் காச்சலும் புளியஞ்சாதமும்.
இதுவும் முன்பே எழுதியதுதான். புளிக்காய்ச்சல்,பிறகு சாதம் என இரண்டும் ஒன்றாக எழுதப்பட்டது. இப்போதும் கனுவன்று உதவும்.
சித்ரான்னங்கள் என்ற . தலைப்பிள் உள்ளது. பாருங்கள்.
Continue Reading மார்ச் 16, 2010 at 1:29 பிப 3 பின்னூட்டங்கள்
புளி அவல்.
வேண்டியவைகள்——-அவல்—2 கப்
நெல்லிக்காயளவு– புளி.–கால்கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
மிளகாய் வற்றல்—-2,—அதிக காரம் வேண்டுமானால் பச்சைமிளகாய்1
தனியாப் பொடி—அரை டீஸ்பூன்
சீராப்பொடி–அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி—கால் டீஸ்பூன்
உப்பு——ருசிக்கு ஏற்ப
நல்லெண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க—கடுகு, பெருங்காயப் பொடி,சிறிது
மேலும் ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பும்,
வேர்க் கடலையும்
வாஸனைக்கு கறி வேப்பிலை
அரை டீஸ்பூன்—-வெல்லப்பொடி.
செய்முறை—-அவலைக் காய்கறி வடிக்கட்டியில் போட்டு
மேலாகத் தண்ணீரை விட்டுக் கலந்து வடிக்கட்டி வைத்துக்
கொள்ளவும்.
புளியைக் கறைத்துக் கெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.
நான் ஸ்டிக் வாணலியில் எண்ணெயைக் காய வைத்து தாளிக்க ,வேண்டியவைகளைத் தாளித்து சீரக தனியா,கறிவேப்பிலை
மஞ்சளைச் சேர்த்துப் பிரட்டி புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.
உப்பு, வெல்லம் சேர்த்துக் கிளறி புளித்தண்ணீர் சுண்டும் வரை
நிதான தீயில் வைக்கவும்.
திக்கான பதம் வரும் போது ஊறின அவலைக் கொட்டி பதமாகச்
சூடு ஏறும் வறை கிளறி இறக்கவும் .
என்னுடைய வழக்கமான வார்த்தை பூண்டு, வெங்காயம்
வேண்டுபவர்கள் தாளிப்பின் போது சேர்த்துச் செய்யலாம்.
இதுவும் ருசியான டிபன்தான்.
புளிக்குப் பதில் தக்காளிப்பழ சாற்றைக் குறுக்கியும்
செய்ய முடியும்.